வழுக்கை தலை உடையவர்களுக்கு உதவித்தொகை கொடுக்கவில்லை என்றால் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என வழுக்கை தலை உடையவர்களின் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் வழுக்கைத் தலை உடையவர்கள் சேர்ந்து தனியாகச் சங்கம் அமைத்துள்ளனர். இந்தச் சங்கத்திற்கு தலைவராக பாலையா என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சங்கத்தின் தலைவர் பாலையா, சங்கத்தின் கோரிக்கை அடங்கிய அறிக்கை ஒன்றை தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவுக்கு அனுப்பி உள்ளார். அந்த அறிக்கையில், வழுக்கை தலையுடன் இருப்பவர்கள் நாள்தோறும் பல பிரச்சனைகளையும் அவமானங்களையும் சந்திக்கிறார்கள். சிறு வயதிலேயே பலருக்கும் வழுக்கை ஏற்பட்டு விடுகிறது. இதனால் அவர்கள் அதிகளவில் அடையும் வேதனைகள் சொல்லி மாளாது.
பொதுவெளியில் நான்கு பேருடன் சேர்ந்து வெளியே செல்லத் தயங்குகின்றனர். வழுக்கை தலை இருப்பவர்களுக்கு திருமணம் நடப்பதும் கஷ்டமாக இருக்கிறது. பலர் தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறார்கள்.
ஊனமுற்றவர்கள், உறவினர்களால் கைவிடப்பட்டவர்கள், நெடுநாள் வியாதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கெல்லாம் அரசாங்கம் உதவித்தொகை வழங்குகிறது. அதுபோல் வழுக்கை தலை உடையவர்களுக்கும் மாதம் 6000 ரூபாய் உதவித்தொகை வழங்க வேண்டும். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உதவித்தொகை கொடுக்காவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம். தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவோம்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.