சீனாவில் வூகான் மாகாணத்திலிருந்து தொடங்கிய கரோனா வைரஸின் தாக்கம் இன்றும் உலகம் முழுவதும் எதிரொலித்து வருகிறது. 125 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பாதிப்பால் இது வரை 5,000 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர். இதேபோல் உலகளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,37,000 பேருக்கு மேல் உள்ளது. இந்தியாவிலும் கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இதையடுத்து இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பல மாநில அரசுகள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளன. இந்நிலையில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க சார்க் நாடுகளுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்தவுள்ளார். பிரதமர் மோடி அழைப்பை ஏற்று சார்க் நாடுகளின் தலைவர்கள் நாளை மாலை 5 மணிக்கு காணொலியில் ஆலோசிக்க உள்ளனர்.
இந்த ஆலோசனைக்கு மாலத்தீவு ஜனாதிபதி இப்ராகிம் முகமது சாலிஹ், நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி, பூடான் பிரதமர் லோடாய் ஷெரிங் வரவேற்பு தெரிவித்துள்ளனர். சார்க் அமைப்பில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பூடான், இந்தியா, மாலத்தீவு, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை ஆகியவை உறுப்பு நாடுகளாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.