புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6- ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ், பா.ஜ.க., உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக, புதுச்சேரி, லாஸ்பேட்டையில் உள்ள மைதானத்தில் இன்று (30/03/2021) மாலை தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். அதேபோல், முன்னாள் முதல்வரும், என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரங்கசாமி, அ.தி.மு.க.வின் அன்பழகன், பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் சாமிநாதன் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் நமச்சிவாயம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "தேர்தல் நடைபெற உள்ள ஐந்து மாநிலங்களிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அலை வீசுகிறது. முன்னாள் முதல்வருக்கு எதிராக ஊழல் புகார்கள் குவிந்துள்ளன. நாராயணசாமிக்கு தேர்தலில் போட்டியிடக் கூட வாய்ப்பு தரப்படவில்லை. நாராயணசாமி மீது காங்கிரஸ் எந்தளவுக்கு மரியாதை வைத்துள்ளது என்பதைப் பாருங்கள். புதுச்சேரியில் கல்வி, வேலைவாய்ப்புத் துறை பாதாளத்துக்குச் சென்றுவிட்டது. புதுச்சேரியை சிறந்த மாநிலமாக மாற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி பாடுபடும். புதுச்சேரியில் முந்தைய காங்கிரஸ் அரசு மக்களிடம் நம்பிக்கையை இழந்து தோல்வி அடைந்துள்ளது. ஊழல் செய்ததாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களே புகார் கூறியுள்ளனர். ஆட்சியின் சாதனை அறிக்கையை காங்கிரஸ் கட்சியால் வெளியிட முடியவில்லை. புதுச்சேரியில் கல்விக் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். கடந்த மாதம் தொடங்கப்பட்ட மருத்துவ வசதிகள் பெரிதும் உதவிகரமாக இருக்கும்.
முந்தைய புதுச்சேரி காங்கிரஸ் அரசு எல்லாத் துறைகளிலும் தோல்வி அடைந்துள்ளது. இதுவரை சந்தித்த தேர்தல்களில் புதுச்சேரி தேர்தல் புதுமையானது. காரைக்கால் மாவட்டத்தையே முற்றிலுமாக மறந்து போய்விட்டது முந்தைய காங்கிரஸ் அரசு. புதுச்சேரியில் புதிதாக இரண்டு மீன்பிடி கிராமங்களை உருவாக்கத் திட்டம் உள்ளது. மக்களின் தேவைதான் எங்களின் வாக்குறுதி, எங்களின் நோக்கம் தெளிவாக உள்ளது". இவ்வாறு பிரதமர் கூறினார்.
கேரளா, தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.