தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகையில், 'சனாதனம் என்ற பெயரே சமஸ்கிருதத்தில் இருந்து வந்ததுதான். இந்த மாநாட்டை பார்க்கின்ற போது சிலருக்கு எரிச்சல் இருக்கும். அவர்களுக்கு முடிந்த வரை எரியட்டும். சினிமாவில் சமஸ்கிருதம் கலந்த தமிழ் வசனங்கள் பேசப்பட்டுக் கொண்டிருந்த பொழுது கலைஞர் தான் 'எந்த காலத்திலடா பேசினாள் பராசக்தி' என வசனம் வைத்தார். எல்லா சமூக மக்களையும் ஒரே இடத்தில் குடி வைத்து அந்த இடத்திற்கு சமத்துவபுரம் என்று பெயர் வைத்து சனாதனத்திற்கு சம்மட்டி அடி கொடுத்தவர்தான் கலைஞர்.
டெங்கு, மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். சொந்த மாநில மக்களை இரண்டு குழுக்களாக பிரித்து கலவரத்தை மூட்டி உள்ளார்கள். இதுதான் சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம். விஸ்வகர்மா திட்டத்தை கொண்டு வந்திருக்கின்ற நரேந்திர மோடி, வரும் நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைய வேண்டும். அடைவார்'' என்றார்.
மீண்டும் தன்னுடைய பேச்சுக்கு விளக்கமளித்துள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ''இந்தியா கூட்டணி வலுப்பெறுவதை திசை திருப்பவே பாஜகவினர் சனாதனம் குறித்த எனது பேச்சை கையில் எடுத்துள்ளனர். எதுவுமே மாறக்கூடாது; எல்லாம் நிலையானது என்பதுதான் சனாதனம் என்று கூறுகிறார்கள். ஆனால் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே திராவிட மாடல். எப்போதுமே பொய் செய்திகளைப் பரப்புவதுதான் பாஜகவின் வேலை. சனாதனம் பற்றி நான் பேசியது சரியானது. எனது பேச்சை பாஜகவினர் திரித்துக் கூறுகின்றனர். சில வருடங்களுக்கு முன்பு பெண்கள் படிக்கக்கூடாது என்று சொன்னார்கள். பல வருடங்களுக்கு முன்பு பெண்கள் மேலாடை அணியக்கூடாது என்று சொன்னார்கள். கோவிலுக்குள் போகக் கூடாது என்று சொன்னார்கள். ஆனால் ஒவ்வொன்றையும் மாற்றி இருக்கிறோம். இதுதான் திராவிட மாடல். என்ன வழக்கு போட்டாலும் அதை சந்திக்க நான் தயார்'' என்றார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பதாகக் கூறப்படும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சனாதனத்திற்கு எதிராக பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தலைக்கு 10 கோடி ரூபாயை சன்மானமாக அயோத்தியை சேர்ந்த சாமியார் பரமன்ஸ ஆச்சாரியா அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் அமைச்சர் உதயநிதியின் புகைப்படத்தை வாளால் குத்தி கிழித்ததுடன், தீ வைத்தும் எரித்தார். அதே சமயம் டெல்லி, பீகார் உள்ளிட்ட இடங்களில் அமைச்சர் உதயநிதிக்கு எதிராகக் காவல் நிலையங்களில் புகார் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.