சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் மாவட்டம் தோறும் பாதுகாப்பு இல்லங்கள் அமைக்கப்பட உள்ளதாக கேரள சமூக நீதித்துறை அமைச்சர் ஷைலஜா அறிவித்துள்ளார்.
சாதி மற்றும் மதம் மாற்றி திருமணம் செய்துகொள்பவர்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வரும் இன்றைய சூழலில் பல இடங்களில் ஆணவக் கொலைகளும் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில் வெவ்வேறு சாதி அல்லது மதத்தை சேர்ந்தவர்களை திருமணம் செய்துகொண்டவர்களை பாதுகாக்கும் நோக்கில் கேரள அரசு பாதுகாப்பு இல்லங்கள் அமைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கேரள சட்டசபையில் பேசிய அமைச்சர் ஷைலஜா, "சாதி, மதம் கடந்து திருமணம் செய்துகொள்பவர்கள் புறக்கணிப்பு, கொலை உள்ளிட்ட பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். அவர்களைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமையாகும்.
எனவே, அதனை கருத்தில் கொண்டு, அவர்களுக்காக பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்த தனித்துவமான முயற்சியை கேரள அரசின் சமூக நீதித்துறை அமைச்சகம் முன்னெடுத்துள்ளது. அவர்களுக்காக அனைத்து மாவட்டங்களிலும் ஓராண்டு வரை அவர்கள் தங்கிக்கொள்ளக்கூடிய பாதுகாப்பு இல்லங்கள் அமைக்கும் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதேபோல அரசு வேலைகளில் உள்ளவர்களுக்கு இடமாற்றம் வழங்குவது போன்றவற்றில் அவர்களை சிறப்புப் பிரிவில் கருத்தில் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார்.