இந்திய இராணுவத்தில் நான்கு ஆண்டுகள் மட்டும் பணிபுரியும் வகையில் புதிய ஆள் சேர்க்கும் முறையான ‘அக்னிபத்’ திட்டத்திற்கு மத்திய அரசு சமீபத்தில் அனுமதி அளித்தது. இந்த அறிவிப்பு வெளியான நாள் முதல் பீகார், உத்தரப்பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் பெரும் போராட்டம் வெடித்துள்ளது. இப்பணிகளில் பெறுவோருக்கு பல்வேறு அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்கப்படும் என பாஜக ஆளும் மாநில அரசுகளும், மத்திய அரசின் சில துறைகளும் அறிவித்துள்ளன. இருப்பினும், பல்வேறு மாநிலங்களில் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல இடங்களில் ரயில்களுக்கு தீ வைக்கும் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. இந்நிலையில் அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற முடியாது என பாதுகாப்புத்துறை உயரதிகாரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தை பகுஜன்சமாஜ், ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மத்திய அரசு தற்போது கொண்டு வந்துள்ள அக்னிபத் திட்டம் ராணுவத்திற்கும், மத்திய அரசுக்கும் பேரழிவு திட்டம் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காங்கிரஸ் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த போராட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இப்போராட்டத்தில் பேசிய ப்ரியங்கா காந்தி, ''போலி தேசபக்தர்களை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். அடுத்து அமைய உள்ள மத்திய அரசு உண்மையான, நேர்மையான தேசபக்தி உள்ளவர்களை கொண்டதாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். இத்திட்டத்தில் இளைஞர்களின் ஆதங்கத்தை தங்கள் கட்சி புரிந்துகொண்டுள்ளது. ஆனால் இளைஞர்கள் வன்முறைப் பாதையை கடைப்பிடிக்கக் கூடாது'' என்றார்.