தமிழகம், கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, குஜராத், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதனால், அந்தந்த மாநில அரசுகள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக, சில மாநிலங்களில், இரவு நேர ஊரடங்கு, பேருந்து சேவையை நிறுத்துவது உள்ளிட்ட கடுமையான கரோனா தடுப்பு விதிகள் அமலில் உள்ளன.
இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடி, மாநில முதல்வர்களுடன் கரோனா தடுப்புப் பணிகள், கரோனா தடுப்பூசி போடும் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, பொதுமக்கள் தாமாக முன்வந்து கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
இந்த நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் மத்திய உள்துறைச் செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார். அதில், 'கரோனா தடுப்பு விதிமுறைகளை மாநிலங்கள் கடுமையாக அமல்படுத்த வேண்டும். பொது இடங்களில் விழிப்புணர்வு இல்லாமல், மெத்தனப் போக்குடன் மக்கள் நடந்து கொள்கிறார்கள். கடந்த சில வாரங்களாக கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. தேவைப்படும் கரோனா தடுப்பு நடைமுறைகளை நிர்வாக அதிகாரிகள் கடுமையாக்க வேண்டும். மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.