Skip to main content

பா.ஜ.க எம்.பி.யின் ஆபாச வீடியோ? போலீசில் புகார்

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
 Riot complaint to police of Obscene video of BJP MP?

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில், 543 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களில் முதற்கட்டமாக 195 வேட்பாளர்களின் பெயர்களை பா.ஜ.க வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலை பா.ஜ.க பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே வெளியிட்டார்.

நட்சத்திர வேட்பாளராக, வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி கடந்த முறை நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. காந்தி நகர் தொகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் போட்டியிடவுள்ளார். மலையாள நடிகரும் பா.ஜ.கவைச் சேர்ந்தவருமான சுரேஷ் கோபி திருச்சூர் தொகுதியில் போட்டியிடுகிறார். மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மத்தியப் பிரதேசத்தின் குணா தொகுதியில் போட்டியிடுகிறார்.மேற்குவங்கம் அசான்சோல்  தொகுதியில் பாஜக சார்பில் போஜ்புரி நடிகர்  பவன் சிங் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் திருவனந்தபுரத்தில் போட்டியிடுகிறார். ராஜஸ்தானின் கோட்டா தொகுதியில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மீண்டும் போட்டியிடுகிறார். மதுராவில், நடிகையும் பா.ஜ.க.வைச் சேர்ந்தவருமான ஹேமமாலினி மீண்டும் போட்டியிடுகிறார். மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் லக்னோ தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். அமேதி தொகுதியில், மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி மீண்டும் போட்டியிடுகிறார். மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரான சிவ்ராஜ் சிங் சவுகான் விதிஷா தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், வரும் மக்களவைத் தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பா.ஜ.க எம்.பி ஒருவரின் பெயரில் போலி ஆபாச வீடியோ பகிரப்பட்டு வருவதாக போலீசில் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது.  

உத்தரப்பிரதேச மாநில, பாராபங்கி மக்களவை தொகுதியின் பா.ஜ.க சார்பில் எம்.பி.யாக பொறுப்பு வகித்து வருபவர் உபேந்திர சிங் ராவத். சமீபத்தில் பா.ஜ.க வெளியிட்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில், 195 வேட்பாளர்களில் ஒருவரான உபேந்திர சிங், பாராபங்கி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், உபேந்திர சிங் எம்.பி தரப்பில் உத்தரப்பிரதேச கோட்வாலி போலீசில் ஒரு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில், ‘உபேந்திர சிங் ராவத் ஆபாச வீடியோவில் இருப்பதாக சமூகவலைத்தளங்களில் போலியான வீடியோ ஒன்று தற்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. பாராபங்கி தொகுதியில் வேட்பாளராக மீண்டும் உபேந்திர சிங் ராவத் அறிவிக்கப்பட்டதை விரும்பாத சில சமூக விரோதிகள் இத்தகைய செயலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், உபேந்திர சிங் ராவத் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் உள்நோக்கத்துடன் இந்த வீடியோ பகிரப்பட்டு வருகிறது. எனவே, இது குறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்