கர்நாடகாவின் மைசூரு மாவட்டத்தில் உள்ள நஞ்சன்கூடு என்ற பகுதியில், சட்டவிரோதமாக கட்டப்பட்டிருந்த இந்து கோயில் ஒன்று, கர்நாடக அரசால் இடிக்கப்பட்டது. இதற்குப் பல்வேறு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. கர்நாடகாவின் எதிர்க்கட்சியான காங்கிரஸும் அரசின் நடவடிக்கையை விமர்சித்தது.
இந்தநிலையில், கடந்த சனிக்கிழமை (18.09.2021) பத்திரிகையாளர்களைச் சந்தித்த வலதுசாரி ‘ஆர்வலர்’ தர்மேந்திர சுரட்கல், முதல்வர் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா, அமைச்சர் சசிகலா ஜோலே ஆகியோரை தாக்கிப் பேசியதோடு, "நாங்கள் மகாத்மா காந்தியையே விடவில்லை. இந்துக்களைப் பாதுகாப்பதற்காக அவர்களைக் கொன்றோம். அப்படியிருக்கையில் உங்களை விட்டுவிடுவோம் என நினைக்கிறீர்களா?" என்றார்.
மேலும் அவர், "சித்ரதுர்காவிலும், தட்சிண கன்னடத்திலும், மைசூரிலும் அரசாங்கத்தால் கோயில்கள் இடிக்கப்பட்டன. இந்து அமைப்புகள் போராட்டங்களை நடத்தின. அரசாங்கத்தை நடத்துவது யார்? காங்கிரஸ் ஆட்சியின்போது இது நடந்திருந்தால், நிலைமை இப்படித்தான் இருந்திருக்கும் என்று நினைக்கிறீர்களா? இந்து மகாசபை இருக்கும்வரை, இந்து கோயில்களை இடிப்பதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இதேபோன்று மசூதிகள் அல்லது தேவாலயங்கள் இடிக்கப்பட்டதற்கான சான்றுகளைக் காணமுடியுமா? கோவில்கள் மட்டுமே குறிவைக்கப்படுகின்றன. நமது அரசியலமைப்பு சமத்துவத்திற்கான உரிமையை உறுதிசெய்கிறது என்றால், இந்துக்கள் மட்டும் ஏன் குறிவைக்கப்படுகிறார்கள்?" என பேசினார்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில், இந்து மகாசபா மாநில தலைவர் எல்.கே. சுவர்ணா, தங்களது அமைப்பில் இருந்து நீக்கப்பட்டவர்கள் இந்து மகாசபையின் பெயரைப் பயன்படுத்தி காந்திக்கு எதிராகவும், பிற அரசியலமைப்பு அதிகாரிகளுக்கு எதிராகவும் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவிப்பதாகக் காவல்துறையிடம் புகாரளித்தார். இதனையடுத்து தர்மேந்திர சுரட்கலும், அவரது கூட்டாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மங்களூர் நகர போலீஸ் கமிஷனர் சஷி குமார், தர்மேந்திர சுரட்கல் இந்து மகா சபையின் தலைவராக இருந்தவர் என்றும், ஆட்சேபனைக்குரிய நடத்தைக்காக இரண்டு வருடங்களுக்கு முன்பு அந்த அமைப்பிலிருந்து நீக்கப்பட்டார் எனவும் தனக்குத் தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ளார். தர்மேந்திர சுரட்கல் தற்போது அகில இந்திய இந்து மகாசபை என்ற அமைப்பில் செயல்படுவதாக கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட மூவர் மீதும் கிரிமினல் சதி, மதம், இனம், பிறந்த இடம், வசிக்கும் இடம், மொழி போன்றவற்றின் அடிப்படையில் பல்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல், நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கில் மோசடியில் ஈடுபடுவது என பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.