தொடர் ரயில் விபத்துக்களுக்கு பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் ராஜினாமா!
இந்தியாவில் சமீப காலமாக தொடர்ந்து ரயில் விபத்துகள் நடந்துவருகின்றன. இதில், பல அப்பாவி மக்கள் பரிதாபமாக உயிரிழக்கின்றனர். இந்தத் தொடர் விபத்துக்களுக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்வதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் ரமேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், நான் தொடர் விபத்துக்களுக்குப் பொறுப்பேற்று ராஜினாமா செய்வதாக பிரதமர் மோடியிடம் சொன்னபோது, அவர் என்னைக் காத்திருக்கச் சொன்னார். ரயில்வே துறையில் கடந்த பல ஆண்டுகளாக இருந்த தேக்கங்களைக் களைவதற்காக, நான் இரத்தமும், வியர்வையும் சிந்தி உழைத்திருக்கிறேன். பிரதமர் மோடியின் ஆட்சியில் பல நல்ல மாறுதல்களை ரயில்வேதுறையில் ஏற்படுத்தி இருக்கிறோம்.
பிரதமரின் கனவான புதிய இந்தியாவில் நவீன, தகுதியான ரயில்வே துறை இருக்கும். அதற்கான வேலைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டதால், அந்தக் கனவு நிறைவேறிவிடும் என நான் உறுதியளிக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
இவரோடு ரயில்வே வாரியத்தலைவர் ஏ.கே.மிட்டலும் ராஜினாமா செய்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டு தினங்களுக்கு முன்னர், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உத்கல் விரைவு ரயில் விபத்துக்குள்ளானது. இதில் 25 பேர் உயிரிழந்தனர். இதற்கு ரயில்வே நிர்வாகமே காரணம் என நாடு முழுவதும் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- ச.ப.மதிவாணன்