Skip to main content

35 துண்டுகளாக வெட்டி வீசப்பட்ட உடல்; நாட்டையே உலுக்கிய ஷ்ரத்தா கொலை வழக்கில் இன்று தீர்ப்பு

Published on 09/05/2023 | Edited on 09/05/2023

 

 Verdict today in the Shraddha case that shook the country

 

திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை இளைஞர் ஒருவர் 35 துண்டுகளாக வெட்டி 18 நாட்கள் ஃப்ரிட்ஜில் வைத்து பின் உடல் பாகங்களை டெல்லி முழுவதும் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அந்த சம்பவம் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக இருக்கிறது.

 

மும்பையைச் சேர்ந்த அஃப்தப் அமீன் பூனாவாலா அங்குள்ள பிரபல கால் சென்டர் ஒன்றில் பணியாற்றி வந்திருக்கிறார். அப்போது அவருடன் பணியாற்றி வந்த ஷ்ரத்தா வாக்கர் என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்படவே இருவருக்கிடையில் காதல் மலர்ந்துள்ளது. ஒரு கட்டத்தில் இந்தக் காதல் விவகாரம் ஷ்ரத்தாவின் பெற்றோருக்குத் தெரிய வர, அவர்கள் அஃப்தப் - ஷ்ரத்தாவின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதனால் டெல்லிக்கு குடிபெயர்ந்த இருவரும் மெஹ்ராலி என்ற பகுதியில் தனி வீடு எடுத்து திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வந்திருக்கின்றனர்.

 

இதையடுத்து ஷ்ரத்தா தனது குடும்பத்தினருடனான தொடர்பை முற்றிலுமாக துண்டித்துள்ளார். பலமுறை அவரது பெற்றோர் தொடர்பு கொள்ள முயன்றும் அவர்களால் முடியாமல் போனது. இந்த நிலையில் சமூக வலைத்தளத்தின் மூலம் ஷ்ரத்தா மற்றும் அஃப்தப் இருக்கும் முகவரியை கண்டுபிடித்த ஷ்ரத்தாவின் தந்தை விகாஸ் மதன், மெஹ்ராலியில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளார். ஆனால் வீட்டுக்கு பூட்டு போட்டிருந்ததால் சந்தேகமடைந்த விகாஸ் மதன் டெல்லி போலீசில் தனது மகளைக் காணவில்லை என புகார் கொடுத்தார்.

 

இதன் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கிய போலீசார், அஃப்தப்பை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், தன்னை திருமணம் செய்துகொள்ள காதலன் அஃப்தப்பை ஷ்ரத்தா வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் அஃப்தப்புக்கு இதில் சம்மதமில்லை என்பதால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், கடந்த வருடம் மே 18 ஆம் தேதி இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரமடைந்த அஃப்தப் ஷ்ரத்தாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். இதனையடுத்து ஷ்ரத்தாவின் உடலை 35 துண்டுகளாக வெட்டி, 18 நாட்கள் ஃபிரிட்ஜில் வைத்து பின்பு டெல்லியில் உள்ள வெவ்வேறு இடங்களில் வீசியது தெரியவந்தது.

 

நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கு தொடர்பாக கடந்த ஜனவரி 24 ஆம் தேதி 6,629 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், மதச் சடங்குகளை செய்ய ஷ்ரத்தா உடல் பாகங்களை ஒப்படைக்கக்கோரி பெண்ணின் தந்தை குற்றவாளி அஃப்தப்க்கு எதிராக தொடர்ந்த  வழக்கில் இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது. டெல்லி கூடுதல் நீதிமன்ற நீதிபதி விஷால் பகுஜா இந்த வழக்கில் விசாரணை நடத்திய நிலையில் இன்று உத்தரவுகளை பிறப்பிக்க இருக்கிறார்.

 

 

சார்ந்த செய்திகள்