பதஞ்சலில் நிறுவனம் ஆயுர்வேதப் பொருட்களோடு சேர்த்து இனி ஜீன்ஸ் பேண்ட் விற்பனையிலும் இறங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
![patanjali](http://image.nakkheeran.in/cdn/farfuture/QHc00WjDUbUcsZn_o4sRdGS7TA5jPwQeBKWhTIpD0LE/1533347668/sites/default/files/inline-images/patanjali1.jpg)
பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் சர்ச்சைக்குரிய சாமியார் பாபா ராம்தேவால் நடந்தப்படுகிறது. முழுக்க முழுக்க சுதேசி பொருட்களுக்கான விற்பனை என்ற பெயரில் தொடங்கப்பட்ட நிறுவனம், சமீபத்தில் சிம் கார்டு மற்றும் கிம்போ எனும் குறுஞ்செய்தி செயலியையும் அறிமுகம் செய்தது. இந்நிலையில், உடை விற்பனையிலும் கால்பதிக்க அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து பதஞ்சலி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா பேசுகையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பதஞ்சலி உடை விற்பனை தொடங்கப்பட உள்ளது. அதில் மிக முக்கியமாக சுத்த சுதேசி ஜீன்ஸ் பேண்ட்கள் விற்பனைக்கு வரவுள்ளன. இந்த வகை ஜீன்ஸ்கள் மேற்கத்திய கலாச்சாரத்தைப் போல் அல்லாமல், முழுக்க முழுக்க இந்திய சூழலுக்கு ஏற்றாற்போல் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு விற்கப்படும். பெண்களும் அணியும் வண்ணம் வடிவமைக்கப்படும் இந்த ஜீன்ஸ் பேண்ட்களை உற்பத்தி செய்ய, வெளிநிறுவனத்திடம் ஒப்பந்தம் பேசப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் பதஞ்சலி ஜீன்ஸ் விற்பனைக்கு வரும் என தெரிவித்துள்ளார். முன்னதாக, பாபா ராம்தேவ் ஆடை விற்பனை நிறுவனம் குறித்து பேசுகையில், 3 ஆயிரம் வகையிலான ஆடை பொருட்களை விற்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.