இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. உத்தரப்பிரதேசத்தின் ஃபிரோசாபாத் மாவட்டத்தில் டெங்குவாலும், மர்மமான வைரஸ் காய்ச்சலால் இதுவரை 12 ஆயிரம் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உத்தரப்பிரதேச சுகாதாரத்துறை வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் இந்த டெங்கு மற்றும் மர்ம வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை ஃபிரோசாபாத்தை சேர்ந்த 88 குழந்தைகள் உட்பட 114 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேபோல் பீகாரிலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பீகார் முதல்வர் நிதிஷ்குமார், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், சுகாதாரத்துறை இந்த விஷயத்தில் எச்சரிக்கையாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் கடந்த 12 நாட்களில் 2,510 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். அம்மாநிலத்தில் அதிகபட்சமாக ஜபல்பூர் மாவட்டத்தில் மட்டும் 399 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் டெல்லியில் இந்த மாதத்தில் மட்டும் 32 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு வட இந்திய மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர், டெங்கு போன்ற திசையன் (vector-borne) மூலம் பரவும் நோய்களைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்குமான நடவடிக்கைகள் துரிதப்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளார்.