இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய குழு இயக்குநர்களின் கூட்டம், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நேற்று (21.05.2021) காணொளி வாயிலாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தற்போதைய பொருளாதார நிலைமை, சர்வதேச - உள்நாட்டு சவால்கள், பொருளாதாரத்தில் கரோனா இரண்டாவது அலையின் பாதிப்பை குறைக்க ரிசர்வ் வங்கி சமீபத்தில் எடுத்த கொள்கை ரீதியிலான நடவடிக்கைகள் ஆகியவை குறித்து ஆராயப்பட்டது.
மேலும் இந்தக் கூட்டத்தில், ஜூலை 2020 - மார்ச் 2021 வரையிலான ஒன்பது மாதங்களுக்கான ரிசர்வ் வங்கியின் உபரித்தொகை 99 ஆயிரத்து 122 கோடியை மத்திய அரசுக்கு வழங்க ஒப்புதலும் அளிக்கப்பட்டது. ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு, மத்திய அரசு மீதான நிதி அழுத்தத்தைக் குறைக்கும் என்றும் கரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தைக் குறைக்க உதவும் என்றும் பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.