Skip to main content

‘தந்தை பெரியார் நினைவிடம் சீரமைக்கும் பணி’- வைக்கத்தில் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு 

Published on 15/11/2023 | Edited on 15/11/2023

 

Renovation of  Periyar's memorial  Minister  ev Velu

 

கேரளா மாநிலம் வைக்கத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் நினைவிடத்தை சீரமைக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் மாதம் 30 ஆம் தேதி (30.3.2023) அறிவித்தார். இதனையடுத்து சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பல முறை கேரளா மாநில வைக்கம் சென்று சீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்து வந்தார். இந்நிலையில் இன்று (15.11.2023) வைக்கம் சென்று, சீரமைப்பு பணிகளின் முன்னேற்றம் குறித்து அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.

 

தந்தை பெரியாரின் நினைவிடம் தரைத்தளம் மற்றும் முதல் தளத்தை உள்ளடக்கி கட்டப்பட்டுள்ளது. இதில், நூலகம் 2582 சதுர அடி பரப்பளவிலும், அருங்காட்சியகம் 1891 சதுர அடி பரப்பளவிலும் அமைந்துள்ளது. ரூ.8.14 கோடி மதிப்பீட்டில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 28.6.2023 துவங்கப்பட்ட சீரமைப்புப் பணிகள், 30.11.2023க்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். 1891 சதுர அடியில் அமைந்திருந்த அருங்காட்சியகத்தை தரை தளம் மற்றும் முதல் தளம் 3025 சதுர அடியில் விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பழைய நூலக கட்டடத்தினை அகற்றி தரைத்தளத்தில் புதிய நூலகம் மற்றும் முதல் தளத்தில் தங்கும் அறைகள் 3457 சதுர அடிகளில் கட்டப்பட்டு வருகின்றன. சிறுவர் பூங்கா மற்றும் திறந்தவெளி அரங்கம் ஆகியவைகளையும் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அருங்காட்சியக பூங்கா மேம்படுத்தும் பணி சுற்றுச்சுவரினை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணிகளும் நுழைவு வாயில் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

 

வைக்கம், தந்தை பெரியார் நினைவிடம் சென்ற உடனே அமைச்சர் எ.வ.வேலு, ஒவ்வொரு பணியாக நேரில் பார்த்து ஆய்வு மேற்கொண்டார். நூலகம் மற்றும் அருங்காட்சியகம் கட்டட பூச்சு பணி மற்றும் டைல்ஸ் பதிக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. சிமெண்ட் பூச்சு பணிகளின், சிமெண்ட், மணல் ஆகியவற்றின் தரத்தினை ஆய்வு செய்த அமைச்சர் எ.வ.வேலு டைல்ஸ் பதிக்கும் பணிகளையும் ஆய்வு செய்தார். சுற்றுச்சுவர் மற்றும் இதர பணிகளையும் ஆய்வு செய்து பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, பொதுப்பணித்துறை அரசு முதன்மைச் செயலாளர் பி.சந்திரமோகன், சிறப்பு அலுவலர் இரா.விஸ்வநாத், முதன்மைத் தலைமைப் பொறியாளர் கே.பி.சத்தியமூர்த்தி, கோவை மண்டலத் தலைமைப் பொறியாளர் காசிலிங்கம் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்