21 நாட்கள் கரோனா லாக்டவுன் தாக்கத்தை எதிர்கொள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்கள் பயனடையும் வகையிலான 1.7 லட்சம் கோடி மதிப்புள்ள நலத்திட்டச் சலுகைகளை அறிவித்த சூழலில் இன்று ரிசர்வ் வங்கி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
![RBI Governor pressmeet amid corona lockdown](http://image.nakkheeran.in/cdn/farfuture/8NsdasoBsY-9MI-YA-xRXcADU_SI-SZhWMfJSCpCTNY/1585287664/sites/default/files/inline-images/fgfhg.jpg)
உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,8 லட்சத்தைக் கடந்துள்ளது. இந்த வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22,000 ஐ கடந்துள்ளது. மேலும், இந்த வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,17446 என்ற அளவில் உள்ளது. இந்தியாவில் கரோனா வைரசினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 694 என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கரோனா பாதிப்பால் 16 பேர் உயிரிழந்த நிலையில், 45 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 121 பேரும், கேரளாவில் 110 பேரும் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் லாக்டவுன் நேரத்தில் மக்களிடையே ஏற்பட்டுள்ள பொருளாதார தேக்க நிலையைச் சீர்படுத்தும் விதமாக ரிசர்வ் வங்கி சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ், இதுகுறித்து பேசுகையில், "ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் குழு கடந்த மார்ச் 25 முதல் 27 வரை நடத்திய ஆலோசனைகளின்படி ரெப்போ விகிதத்தைக் குறைப்பதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ரெப்போ விகிதம் 75 புள்ளிகள் குறைக்கப்பட்டு, 5.15 சதவிகிதத்திலிருந்து 4.4% ஆகக் குறைக்கப்படுகிறது. மேலும், வங்கிகளில் வாங்கிய எந்த கடனுக்கும் மூன்று மாதம் EMI கட்ட தேவையில்லை. அதேபோல வங்கிகளும் அடுத்த மூன்று மாதங்களுக்குக் கடன் வசூலிப்பை நிறுத்திவைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு கிராமப்புற வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், வீட்டுக்கடன் அளிக்கும் நிதி நிறுவனங்களுக்கும் பொருந்தும். மேலும், மூன்று மாதங்கள் வாடிக்கையாளர் தனது தவணையைச் செலுத்தாததால் அவரது சிபில் ஸ்கோர் பாதிக்கப்படக்கூடாது.
மிகமுக்கியமாக, பங்கு விலைகள் சரிவதை வைத்து மக்கள் தங்கள் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் வங்கி பாதுகாப்பற்ற சூழலில் உள்ளது எனக் கருதுவது தவறானது. தனியார் துறை வங்கிகள் உள்ளிட்ட வணிக வங்கிகளின் வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் உள்ள பணத்தின் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. அதேபோல அனைத்து வங்கிகளின் ரொக்க இருப்பு விகிதம் (சிஆர்ஆர்) 100 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு 3% ஆக நிர்ணயிக்கப்படுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.
ரெப்போ விகிதம் குறைப்பு மற்றும் ரொக்க இருப்பு விகிதம் ஆகியவற்றைக் குறைப்பதன் மூலம் மக்களிடம் பணப்புழக்கத்தை அதிகரிக்கவும், மக்களின் வாங்கும் திறனைக் குறையாமல் சீர்படுத்தி பொருளாதாரத்தை ஒழுங்குபடுத்தவும் ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்புகள் வழிவகை செய்யும் எனத் தெரிவிக்கப்படுகிறது.