கடந்த 2019ம் ஆண்டில் சீனாவில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் அடுத்த இரண்டு ஆண்டுகளில் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பரவி கோடிக்கணக்கானவர்களைப் பாதித்தது. பல லட்சக்கணக்கான மக்கள் இந்த பாதிப்பின் காரணமாக உயிரிழந்தனர். இந்தியாவில் இதன் பாதிப்பு என்பது மிகப்பெரிய அளவிலிருந்தது. கிட்டதட்ட 4.5 கோடி பேர் இதுவரை இந்நோயினால் பாதிக்கப்பட்டனர். 5 லட்சம் பேர் வரை இந்த நோய் தாக்குதல் காரணமாக மரணமடைந்தனர்.
இந்நிலையில் தற்போது கரோனா வைரஸ் திரிபு ஏற்பட்டு சீனாவில் வெகு வேகமாகக் கடந்த சில நாட்களாகப் பரவி வந்தது. பலர் தொடர்ந்து சிகிச்சை பலனின்றி இறந்து வருவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன. சீனாவில் பரவி வரும் பிஎப் 7 வகை கரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது. குஜராத்தில் இருவருக்கும், ஒடிசாவில் ஒருவருக்கும் இந்த வகை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகக் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளை மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.