டெல்லி வன்முறை தொடர்பாக விசாரித்து வந்த நீதிபதி முரளிதர் பணியிடமாற்றம் செய்யப்பட்டது, முன்பே முடிவு செய்யப்பட்ட ஒன்றுதான் என மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
டெல்லி கலவரத்திற்கு முன்பு, வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசிய பாஜகவின் கபில் மிஸ்ரா உட்பட மூன்று பாஜக முக்கிய தலைவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிய உத்தரவிட்ட டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் நேற்று இரவு பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். இது மிகப்பெரிய சர்ச்சையான நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இதனை கடுமையாக விமர்சித்தன.
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், "உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கொலீஜியம் கடந்த 12.02.20 அன்று அளித்த பரிந்துரையின் படியே , நீதிபதி முரளிதர் பணியிட மாற்றம் நடைபெற்றது. பணியிட மாற்றத்தின் போது, சம்பந்தப்பட்ட நீதிபதியின் ஒப்புதலும் பெறப்படும். வழக்கமான ஒரு பணியிட மாற்றத்தை காங்கிரஸ் அரசியலாக்குகிறது. இந்திய மக்கள் காங்கிரஸ் கட்சியை நிராகரித்திருக்கிறார்கள். ஆனால் அக்கட்சி இந்தியாவின் மதிப்புமிக்க அமைப்புகளை தொடர்ந்து தாக்கி வருகிறது" என தெரிவித்துள்ளார்.