கேரள தங்கக்கடத்தலில் தேடப்பட்டு வரும் ஸ்வப்னா சுரேஷ், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தூதரக பொது அலுவலகத்தில் நிர்வாகச் செயலாளராகப் பணியாற்றுவதாகவும், தனது பணியைத்தான் செய்ததாகவும் கூறி நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்துள்ளார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரகப் பெயரைப் பயன்படுத்தி அமீரகத்திலிருந்து தங்கம் கடத்தப்படுவதாகச் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு அண்மையில் ரகசியத் தகவல் கிடைத்தது. பொதுவாகத் தூதரகத்திற்கு வரும் பார்சல்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்யமாட்டார்கள். ஆனால், இந்தத் தகவலை அடுத்துக் கடந்த ஜூன் மாதம் 30-ஆம் தேதி தூதரகத்துக்கு வெளிநாட்டிலிருந்து வந்த ஒரு பார்சலை, அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அதில் 30 கிலோ தங்கம் இருந்துள்ளது. தூதரகத்தின் பெயரில் இவ்வளவு பெரிய தங்கக் கடத்தல் நடைபெற்றது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பான விசாரணை முடக்கிவிடப்பட்டது.
இந்த விசாரணையின் போது, தகவல் தொடர்புத் துறையில் பணியாற்றும் ஸ்வப்னா சுரேஷ்க்கு இதில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அமீரக நாட்டுத் தூதரகத்தில் பணியாற்றியிருந்த ஸ்வப்னா, அங்குள்ள தொடர்புகளைப் பயன்படுத்தி இதனைச் செய்துவந்துள்ளதாகச் சந்தேகம் எழுந்தது. இதனையடுத்து ஸ்வப்னா சுரேஷ் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, இதுதொடர்பாக சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. மேலும், தகவல் தொடர்புத் துறைச் செயலராகவும், கேரளா முதல்வர் பினராயி விஜயனின் முதன்மைச் செயலராகவும் இருந்த சிவசங்கருடன் ஸ்வப்னா தொடர்பிலிருந்துள்ளதாகக் கண்டறியப்பட்டது. இதனையடுத்து சிவசங்கரிடம் 30 கிலோ தங்கக்கடத்தல் தொடர்பாக விசாரணை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தூதரக பொது அலுவலகத்தில், தான் நிர்வாகச் செயலாளராக பணியாற்றுவதாகவும், தனது பணியைத்தான் செய்ததாகவும் கூறி நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்துள்ளார் ஸ்வப்னா. அவரது அந்த மனுவில், "ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தூதரக பொது அலுவலகத்தில் நிர்வாகச் செயலாளராக 2016 ஆம் ஆண்டு முதல் ஸ்வப்னா பணியாற்றி வருகிறார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துணைத் தூதரகத்தின் தற்போதைய செயல் பொறுப்பாளராக இருக்கும் ரஷீத் காமிஸ் அல் ஷீமிலி, 2020 ஜூன் 30 அன்று குறிப்பிட்ட அந்த பார்சல் தாமதம் அடைவது குறித்து ஸ்வப்னாவை சுங்கத் துறையில் விசாரிக்கச் சொன்னார். மீண்டும் ஜூலை 1, 2020 அன்று செயலாளர் என்ற அடிப்படையில் திருவனந்தபுரத்தில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு ஸ்வப்னா அறிவுறுத்தப்பட்டார்.
எனவே ஸ்வப்னா சுங்க உதவி ஆணையரை அழைத்துத் தூதரகத்தின் பெயரில் வந்த பார்சல்கள் குறித்துக் கேட்டுள்ளார். அதன்பின்னர், ஜூலை 1, 2020 அன்று மாலை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரக உதவி ஆணையருக்கு சுங்கத்துறை அலுவலகத்திலிருந்து ஒரு மின்னஞ்சல் வந்துள்ளது. அதில் 2020, ஜூலை 3 அன்று யு.ஏ.இ. தூதரக சரக்கு வளாகத்திற்கு வந்து பார்சலை சரிபார்த்து, அந்த பார்சல் தனக்குச் சொந்தமானது என்று சுங்கத்துறையிடம் நிரூபிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தூதரக அதிகாரியின் ஆணைப்படி தனது பணியை மட்டுமே தான் செய்ததாகக் கூறும் ஸ்வப்னா, உயர்நீதிமன்றம் தனக்கு முன்ஜாமீன் வழங்கவேண்டும் என மனுத் தாக்கல் செய்துள்ளார்.