உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் என்ற பகுதியில் நேற்று முன்தினம் (02.07.2024) ஆன்மிகக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆன்மிக சொற்பொழிவாளர் போலே பாபா உரையாற்றினார். இவரது பேச்சைக் கேட்க ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இதற்காகக் கூட்டம் கூட்டமாக வந்த மக்கள் நிழச்சி முடிந்த பின் திரும்பிச் செல்லும்போது வெளியே செல்ல வழியின்றி நெரிசலில் சிக்கினர். இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலரும் மயங்கி விழுந்தனர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் என 100க்கும் மேற்பட்டோர் பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. மேலும் இந்த சம்பவத்தில் சிக்கி படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்படு வருகிறது.
இந்த கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கவும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கவும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டிருந்தார். அதோடு இந்த சம்பவம் தொடர்பாக உயர்மட்டக்குழு விசாரணை செய்யவும் அவர் உத்தரவிட்டிருந்தார். அதே சமயம் பிரதமர் மோடி ஹத்ராஸில் நடந்த விபத்தில் இறந்தவர்களின் உறவினர்களுக்குப் பிரதமரின் பொது நிவாரண நிதியில் இருந்து 2 லட்சம் ரூபாயும், இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் ரூபாயும் வழங்க உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் ஹத்ராஸ் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து அலிகார் போலீஸ் ஐஜி ஷலப் மாத்தூர் செய்தியாளர்களை சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், “இறந்தவர்களின் எண்ணிக்கை 121 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் அனைத்து உடல்களும் அடையாளம் காணப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கான நடவடிக்கைகள் முடிக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவத்திற்குக் காரணமான நான்கு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் இந்த ஆன்மிக நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டுக் குழு உறுப்பினர்கள் மற்றும் சேவகர்களாக பணியாற்றியுள்ளனர்.
நெரிசல் ஏற்பட்ட போது தற்போது கைது செய்யப்பட்டுள்ள 6 சேவகர்கள் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டனர். முக்கிய குற்றவாளியான பிரகாஷ் மதுகரை கைது செய்வதற்கு ஏதுவாக அவரைப் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு ரூ. 1 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில், அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் இந்த சம்பவம் சதியால் நடந்ததா என்பதையும் நாங்கள் விசாரிப்போம். போலே பாபாவின் குற்ற வரலாறு குறித்து விசாரித்து வருகிறோம். நிகழ்ச்சிக்கான அனுமதி அவரது பெயரில் எடுக்கப்படவில்லை” எனத் தெரிவித்தார்.