கரோனா தடுப்பு மருந்து குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் "உலக நோய்த்தடுப்பு கூட்டணிக்கு" அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா சார்பில் 15 மில்லியன் டாலர் நிதி நன்கொடையாக வழங்கப்படும் எனப் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
கரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டறியும் பணிகள் உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில், இந்த ஆராய்ச்சிகளுக்கு நிதி திரட்டும் வகையில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உலக தலைவர்களுடன் இணைந்து மாநாடு ஒன்றை நடத்தினார். காணொளிக்காட்சி வாயிலாக இதில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, GAVI எனப்படும் தடுப்பு மருந்து ஆராய்ச்சி கூட்டமைப்பிற்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா சார்பாக 15 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "இன்றைய சவாலான சூழலில், இந்தியா உலக நாடுகளுடன் ஒற்றுமையுடன் நிற்கிறது என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். குறைந்த விலையில் தரமான மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்கான நமது நிரூபிக்கப்பட்ட திறன், நோய்த்தடுப்பு மருந்துகளை விரைவாகப் பகிர்ந்துகொள்வதில் நமது சொந்த உள்நாட்டு அனுபவம் மற்றும் நமது கணிசமான அறிவியல் ஆராய்ச்சி திறன்கள் ஆகிய அனைத்தையும் இந்த மனிதநேய சேவையில் பயன்படுத்த வேண்டும்" எனத் தெரிவித்தார்.