இந்தியாவில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை கரோனாவிற்கு பலியாகியுள்ள நிலையில், தி எக்கனாமிஸ்ட் என்ற சர்வதேச ஊடகம் வெளியிட்ட கட்டுரை ஒன்றில், இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையை விட 5-7 மடங்கு அதிக மரணங்கள் ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்திருந்தது.
இந்தநிலையில் இதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், ஊடகத்தின் பெயரை குறிப்பிடாமல் பதிலளித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஊடகத்தின் கட்டுரை ஊகத்தின் அடிப்படையிலானது. எந்தவொரு தொற்றுநோயியல் ஆதாரமும் இல்லாமல் ஊகிக்கப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டது" என கூறியுள்ளது.
மேலும் "சரியான கருவிகளால் செய்யப்படாத ஆய்வுகளிலிருந்து அந்த கட்டுரை தரவுகளை திரட்டியுள்ளது. கட்டுரை மேற்கோள் காட்டிய ஆய்வு வர்ஜீனியா காமன்வெல்த் பல்கலைக்கழகத்தின் கிறிஸ்டோபர் லாஃப்லர் செய்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் பப்மேட், ரிசர்ச் கேட் போன்ற விஞ்ஞான தரவுத்தளங்களில் செய்யப்பட்ட இணைய தேடலில், அந்த ஆய்வு கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த ஆய்வின் விரிவான வழிமுறையை அந்த பத்திரிகை வழங்கவில்லை" எனவும் மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.
மத்திய சுகாதாரத்துறையின் இந்த விளக்கத்தில், "ஐ.சி.எம்.ஆர் வழங்கிய வழிகாட்டுதல்படி மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள் கரோனா மரணங்களை பதிவு செய்கிறது" எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.