’புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தேவை’ என்பது தொடர்பாக சுமார் 20-க்கும் மேற்பட்ட சமூக அமைப்பினர்கள் பங்கேற்ற கலந்தாலோசனைக் கூட்டம் புதுச்சேரி தனியார் ஓட்டலில் நேரு எம்.எல்.ஏ. தலைமையில், பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. முன்னிலையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன், மீனவர் விடுதலை வேங்கைகள் நிறுவனர் மங்கையர்செல்வன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநில செயலாளர் ஸ்ரீதர், தமிழர் களம் மாநில அமைப்பாளர் கோ.அழகர், மக்கள் வாழ்வுரிமை இயக்க தலைவர் ஜெகன்நாதன், தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் வீர.மோகன், மாணவர் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தேவை என்று 11 முறை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியும் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. எனவே மத்திய அரசால் நியமிக்கப்படும் அரசு அதிகாரிகள் புதுச்சேரி சட்டமன்றத்தை மதிப்பதில்லை. வேலை வாய்ப்பின்மையால் புதுச்சேரி இளைஞர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். உயர்ந்த பதவியில் வேலைக்குச் செல்ல முடியவில்லை. தற்போது பத்தாயிரம் பணியிடங்களை நிரப்ப அரசு அறிவிப்பு வெளியிட்டு வருகிறது. அதற்கு வயது தளர்வு வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால், அதற்கு அதிகாரிகள் அனுமதி மறுத்துவிட்டனர். இதனால் புதுவை மாநில மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மக்களால் தேர்வான முதல்வரின் அதிகாரத்தைப் பறிக்கும் விதமாகவே அதிகாரிகள் செயல்படுகிறார்கள். அரசால் அறிவிக்கப்படும் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த துணைநிலை ஆளுநரும், தலைமைச் செயலாளரும், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் தடையாக இருக்கிறார்கள். அதிகாரிகள் சொல்வதைக் கேட்க வேண்டிய நிலைமை அரசுக்கு உள்ளது.
இந்தியாவில் 10 லட்சத்துக்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட மிசோரம், சிக்கிம் மாநிலங்களுக்கு மாநிலத் தகுதி இருக்கும்போது 14 லட்சம் மக்கள்தொகை கொண்ட புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தராதது வியப்பளிக்கிறது. எனவே சிறப்பு சட்டமன்றத்தைக் கூட்டி புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தேவை என்ற தீர்மானத்தை மீண்டும் இயற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மேலும், "புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற வலியுறுத்தி மக்கள் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும், அதில் முதல் கட்டமாக மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், அடுத்தடுத்து மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கங்கள் நடத்துவது குறித்தும், போராட்டங்கள் நடத்துவது குறித்தும் முடிவு செய்யப்பட்டுள்ளது" என நேரு எம்.எல்.ஏ. தனது பேட்டியின் போது தெரிவித்தார்.