2021 புதுச்சேரி சட்டமன்ற பொதுத்தேர்தலில் என்.ஆர் காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணி 16 இடங்களைப் பிடித்து, கடந்த 7ஆம் தேதி என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து கரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதேசமயம் அமைச்சர்கள் நியமிக்கப்படவில்லை, அமைச்சரவை மற்றும் எம்.எல்.ஏக்கள் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்ளவில்லை. பாஜகவைச் சேர்ந்த வெங்கடேசன், ராமலிங்கம், அசோக் பாபு ஆகிய 3 பேரை நியமன எம்.எல்.ஏக்களாக மத்திய உள்துறை நியமித்து அறிவித்துள்ளது.
முதலமைச்சர் ரங்கசாமிக்கு தெரிவிக்கப்படாமலே அறிவிக்கப்பட்டுள்ள இந்த அறிவிப்பு, புதுச்சேரி தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேரும் புதுச்சேரி பாஜக மாநில தலைவர் சாமிநாதன், பொதுச்செயலாளர் ஏம்பலம் செல்வம் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது செய்தியாளர்களிடையே பேசிய சாமிநாதன், “புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி குணமடைந்த பிறகே அமைச்சர்கள் பதவி ஏற்பு நடைபெறும். நியமன எம்.எல்.ஏக்கள் நியமனம் குறித்து கூட்டணிக் கட்சிகளுக்கும், முதல்வர் ரங்கசாமிக்கும் தெரியும்.
கரோனா சிகிச்சை முடிந்து ரங்கசாமி வந்த பிறகே அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் பதவி ஏற்பு நடக்கும். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்கும். தேசிய ஜனநாயக கூட்டணிக்குப் போதிய பலம் இருக்கிறது. தங்களது தொகுதிக்கு நல்லது நடக்க வேண்டும் என்ற அடிப்படையில், சுயேட்சை எம்.எல்.ஏக்கள் பாஜகவிற்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். கூட்டணியில் குழப்பமில்லை” என்று தெரிவித்தார்.
இதனிடையே என்.ஆர்.காங்கிரஸ் மாநிலச் செயலாளர் N.S.J. ஜெயபால் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் தொகுதி பங்கீடு மட்டுமே பேசி முடிவு செய்யப்பட்டது. நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ராஜ்யசபா உறுப்பினர் சம்பந்தமாக பங்கீடு கேட்டதற்கு, தேர்தலுக்குப் பிறகு டெல்லியில் பேசி முடிவு செய்துகொள்ளலாம் என்று உறுதி செய்யப்பட்டது. ஆகவே இப்போது நியமனம் செய்யபட்டிருக்கும் பாஜக எம்.எல்.ஏக்கள் குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது” என குறிப்பிட்டுள்ளார்.