மயிலாடுதுறையில் ஐந்து ஆண்களை ஏமாற்றி பெண் ஒருவர் மோசடியாக திருமணம் செய்தது குறித்து புகார் எழுந்த நிலையில் சம்பந்தப்பட்ட பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் திட்டை ஊராட்சி பகுதியைச் சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் ஒருவர் நிஷாந்தி என்ற பெண்ணை கடந்த 20ஆம் தேதி திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த திருமணத்திற்காக சீர்காழியின் சில பகுதிகளில் திருமண வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. இதனைப் பார்த்து அதிர்ந்து போன பெயிண்டர் வேலை பார்த்து வந்த இளைஞர் ஒருவர், கடந்த 2017 ஆம் ஆண்டு தன்னை இதே பெண் திருமணம் செய்துவிட்டு பின்னர் ஏமாற்றி விட்டுச் சென்றதாக சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இந்த புகாரை அடுத்து சம்பந்தப்பட்ட நிஷாந்தியை போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர் கொடியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த லட்சுமி என்பது தெரியவந்தது. கடந்த 2010 ஆம் ஆண்டு சிலம்பரசன் என்பவரை லட்சுமி திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு ஒரு மகன் ஒரு மகள் இருந்ததும் தெரிய வந்தது. சிலம்பரசன் இறந்து விட்டதால் லட்சுமி என்ற பெயரை மாற்றிக் கொண்டு பெயிண்டர் வேலை செய்து வந்த இளைஞரை திருமணம் செய்துள்ளார். அதன் பிறகு சிதம்பரம் கோல்டு நகரைச் சேர்ந்த ஐ.டி ஊழியர் ஒருவரையும் திருமணம் செய்தது தெரிய வந்துள்ளது. அதோடு மட்டுமல்லாமல் அவரையும் ஏமாற்றிவிட்டு ஈரோட்டை சேர்ந்த ஒருவரையும் லட்சுமி திருமணம் செய்தது தெரிய வந்தது. இந்நிலையில், தான் ஒரு மருத்துவர் எனக்கூறி ஐந்தாவது திருமணம் செய்துகொண்ட நிலையில் போலீசார் லட்சுமி மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.