“இந்தியாவின் நற்பெயரை சீர்குலைப்பது பிரதமர்தான்” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
அடுத்தாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் பாஜகவினை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்ற முனைப்புடன் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமை பயணம் என்ற பெயரில் பாத யாத்திரை மேற்கொண்டு நாட்டு மக்களை சந்தித்து அவர்களது குறைகளைக் கேட்டறிந்தார். இந்த ஒற்றுமை பயணத்திற்கு மக்கள் பெரும் வரவேற்பு அளித்ததாக அக்கட்சியினர் தெரிவித்தனர்.
இந்த நிலையில் தனது ஒற்றுமை பயணத்தை முடித்த ராகுல் இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்குச் சென்று கேம்ப்ரிஜ் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். மேலும் அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சியில் ராகுல் கலந்துகொண்டு வருகிறார். அப்படி லண்டனில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “சமீபத்தில் இந்தியாவின் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகத்தில் நடைபெற்ற வருமான வரிச் சோதனை என்பது நாடு முழுவதும் எழும் விமர்சன குரலை ஒடுக்கும் நடவடிக்கையின் ஒரு எடுத்துக்காட்டாகும். இதுபோன்று இன்னும் பல நடவடிக்கைகளை ஆளும் பாஜக அரசு எடுத்துள்ளது. இந்த ஆளும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள்தான் நான் ஒற்றுமை பயணத்தை தொடங்க காரணமாக இருந்தது. இந்தியாவில் நடப்பதை பிபிசி தற்போதுதான் பார்க்கிறது. ஆனால் கடந்த 9 ஆண்டுகளாக இதுதான் நடைபெற்று வருகிறது. அரசுக்கு இணக்கமாக இருந்தால் செய்தியாளர்கள் கௌரவிக்கப்படுகின்றனர். அதுவே எதிராக இருந்தால் அச்சுறுத்தப்பட்டு தாக்கப்படுகின்றனர். பிபிசி இந்தியா அவர்களுக்கு எதிராக செய்திகள் வெளியிடுவதை நிறுத்தினால் அவர்கள் மீது இருக்கும் வழக்குகள் அடுத்த நாளே காணாமல் போய்விடும்.
இந்தியாவில் ஜனநாயக அமைப்பின் மீது மிருகத்தனமான தாக்குதல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஊடகங்கள், அமைப்புகள், நீதித்துறை, நாடாளுமன்றம் ஆகிய அனைத்தும் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “சமீபத்தில் நான் கேம்ப்ரிஜ்ஜில் பேசியதை ‘உலக அரங்கில் இந்தியாவின் புகழைக் கெடுத்துவிட்டதாக’ பாஜகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். அப்படி எதுவும் செய்யவில்லை. ஒருபோதும் இந்தியாவின் புகழ் கெடும் வகையில் நடந்து கொள்ளமாட்டேன். வெளிநாடு செல்லும்போது இந்தியாவின் நற்பெயரை சீர்குலைப்பது பிரதமர்தான். கடந்த 2004 ஆம் ஆண்டிலிருந்து 2014 ஆம் ஆண்டு வரை இந்தியாவில் எதுவும் நடைபெறவில்லை என்று அவர் கூறுவது வழக்கம். அப்படியென்றால் அந்த பத்தாண்டுகளில் இந்தியாவிற்காக பாடுபட்டவர்களின் உழைப்பை என்ன சொல்வது?” என்றார்.