மத்திய அரசைக் கண்டித்து ஐஎன்டியூசி, சிஐடியூ, எச்எம்எஸ், தொமுச உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று நாடு முழுவதும் வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது.
பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படுவது, நிலக்கரி துறையில் 100% நேரடி அந்நிய முதலீடுக்கு அனுமதிப்பது போன்றவற்றிற்கு எதிர்ப்பு உள்ளிட்ட 12 கோரிக்கைகளை முன்வைத்து மத்திய தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதற்கு பல்வேறு கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்நிலையில், இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள ராகுல் காந்தி, "மோடி - அமித் ஷாவின் பொதுமக்கள் விரோத, தொழிலாளர் விரோத பேரழிவு கொள்கைகளின் மூலமாக வேலையின்மையை ஏற்படுத்தி, பொதுத்துறை நிறுவனங்களை பலவீனப்படுத்தி, மோடியின் முதலாளித்துவ நண்பர்களுக்கு அவற்றை விற்பனை செய்வதை நியாயப்படுத்தப்படுகிறது. இன்று, 25 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் பாரத்பந்த் 2020 ல் கலந்துகொண்டுள்ளனர். அவர்களுக்கு எனது சல்யூட்" என தெரிவித்துள்ளார்.