Skip to main content

“பெண் குழந்தை பிறந்தவுடன் 50 ஆயிரம் டெபாசிட் செய்யும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்” - புதுச்சேரி முதல்வர் 

Published on 10/06/2023 | Edited on 10/06/2023

 

 deposit 50 thousand on birth of girl child will be implemented soon says Puducherry cm

 

புதுச்சேரி நகர வளர்ச்சிக் குழுமம் மற்றும் புதுச்சேரி மாநில அளவிலான வங்கிகளின் குழுமம் சார்பில் பிரதம மந்திரி சாலையோர வியாபாரிகள் ஆத்ம நிர்பர் நிதி கடன் முகாம் கம்பன் கலையரங்கில் நடந்தது. குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய் சரவணன் குமார் தலைமை தாங்கினார். அனிபால் கென்னடி எம்.எல்.ஏ முன்னிலை வகித்தார். மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுமத் தலைவர் குமார் துரை வரவேற்றார். இம்முகாமை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்து சாலையோர கடை வியாபாரிகளுக்கு கடனுதவிக்கான ஆணையை வழங்கினார். 

 

பின்னர் முதல்வர் ரங்கசாமி பேசுகையில், “ஏழை - எளிய மக்கள் வளர்ச்சி அடைய வேண்டும் என்று நிறைய திட்டங்களை பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார். அதில் ஒன்று பிரதம மந்திரி சாலையோர வியாபாரிகளுக்கான ஆத்ம நிர்பர் நிதி திட்டம். சாலையோர கடை வியாபாரிகளுக்கு ஆரம்பத்தில் சிறிய முதலீடு தேவைப்படுகிறது என்பது நிதர்சனமான உண்மை. இதனை பிரதமர் உணர்ந்துதான் வங்கிகள் மூலம் இந்த கடனுதவி திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்.

 

புதுச்சேரியில் நிறைய சாலையோர கடைகளில் வியாபாரம் நடக்கிறது. சாலையில் செல்வோருக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாமலும் வியாபாரம் செய்ய வேண்டும். புதுச்சேரியில் கடந்த முறை 1,567 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இதில் 608 பேர் தான் சரியாக கடனை செலுத்தி, 2வது முறையாக ரூ.20 ஆயிரம் கடனுதவி பெற்றுள்ளனர்.  வாங்கிய கடனை சரியாக திருப்பி செலுத்த வேண்டும். அப்போதுதான் மேலும், மேலும் வங்கியில் கடனுதவி பெற்று வியாபாரத்தை உயர்த்திக் கொள்ள முடியும்.

 

புதுச்சேரி அரசு பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. குடும்ப தலைவிக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளோம். சுமார் 70 ஆயிரம் குடும்பத் தலைவிகளுக்கு உதவித்தொகை கிடைக்கின்ற நிலையில் இத்திட்டம் செயல்படவுள்ளது. பெண் குழந்தை பிறந்தவுடன் வங்கிக் கணக்கில் ரூ.50 ஆயிரம் டெபாசிட் செய்யும் திட்டமும், எரிவாயு சிலிண்டருக்கு ரூ. 300 மானியம் ஆகிய திட்டங்களையும் விரைவில் செயல்படுத்த உள்ளோம். சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியாக ரூ.66 கோடி ஆரம்பத்திலேயே ஒதுக்கி கொடுத்துள்ளோம். உட்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும், மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவதிலும் அரசு கவனமாக செயலாற்றி வருகிறது” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்