கேரள தங்கக் கடத்தல் வழக்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் மகன் பினீஷ் கொடியேறியிடம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் நேற்று 11 மணிநேரம் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருவனந்தபுரத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரகத்தின் பெயரைப் பயன்படுத்தி தங்கம் கடத்திய வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் , சந்தீப் நாயர், சரித் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக 20-க்கும் மேற்பட்டோரிடம் அமலாக்கப்பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் மகன் பினீஷ் கொடியேறிக்கு அமலாக்கப்பிரிவினர் சம்மன் அனுப்பியிருந்தனர்.
பெங்களூருவில் போதை மருந்து கடத்திய கும்பலுடன் பினீஷ் கொடியேறிக்கு தொடர்பு இருப்பதாக தேசிய போதை மருந்து தடுப்புப் பிரிவினர் சந்தேகித்த நிலையில், தங்கக்கடத்தல் வழக்கிலும் அவருக்குத் தொடர்பு இருக்கலாம் என அமலாக்கத்துறையினர் சந்தேகித்தனர். இதன் காரணமாக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், நேற்று அவர் விசாரணைக்கு ஆஜரானார். நேற்று காலை 10 மணிக்கு அலுவலகத்திற்கு சென்ற பினீஷ் கொடியேறியிடம் இரவு 10 மணி வரை விசாரணை நடைபெற்றதாகவும், தங்கக்கடத்தல் தொடர்பாக இதில் அவரிடம் கேள்வி கேட்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.