இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதில், 6 கட்ட தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளது. இதையடுத்து, இறுதிக்கட்டத் தேர்தல் ஜூன் 1 ஆம் தேதி அன்று நடைபெறும். ஏழாம் கட்ட வாக்குப்பதிவை எதிர்கொண்டு அரசியல் கட்சிகள் தீவிரத் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஜூன் நான்காம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்த நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசினார். அதில் அவர், “இந்தியா கூட்டணியும், அரசியலமைப்பும் ஒருபுறம், அரசியலமைப்பை அழிக்க நினைப்பவர்கள் மறுபுறம். இந்தியா கூட்டணி இதயம், உயிர் மற்றும் இரத்தம் போல் அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்கும். இந்தியா கூட்டணி, இட ஒதுக்கீட்டின் 50 சதவீத வரம்பை முடிவுக்குக் கொண்டுவரும். அதே வேளையில் அதை அதிகரிக்கும்.
அனைவரும் பயாலஜிகலாக பிறந்தவர்கள். ஆனால், நரேந்திர மோடி பயலாஜிகலாக பிறந்திருக்க வாய்ப்பில்லை என்று கூறுகிறார். அம்பானி மற்றும் அதானிக்கு உதவுவதற்காக அவர் தனது ‘பரமாத்மாவால்’ (கடவுள்) அனுப்பப்பட்டுள்ளார், ஆனால் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு உதவ ‘பரமாத்மா’ அவரை அனுப்பவில்லை. பரமாத்மா அவரை அனுப்பியிருந்தால் அவர் ஏழைகளுக்கும் விவசாயிகளுக்கும் உதவியிருப்பார். இது என்ன வகையான கடவுள்? இது பிரதமர் மோடியின் கடவுள் என்று நான் நினைக்கிறேன்.
ஜூன் 4க்கு பிறகு குட் பை பிஜேபி, குட் பை நரேந்திர மோடி, டாடா... பொதுமக்களை ஏமாற்றும் இந்தப் போலி பக்கீருக்கு இன்னும் 7 நாட்களே உள்ளன. இந்தியா கூட்டணி சத்தமாகவும் தெளிவாகவும் வாக்குகளைப் பெறுகிறது. பா.ஜ.கவிடம் இருந்து நாடு விடுதலை பெறும். நாட்டின் உண்மையான நல்ல நாட்கள் வரவுள்ளன. விரைவில், விரைவில்..” என்று தெரிவித்தார்.