தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் தேதியைக் கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி அன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பிருந்தே இந்த ஐந்து மாநிலங்களிலுமே அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தங்கள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்தனர். சில இடங்களில் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சத்தீஸ்கர் மாநிலத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 7 ஆம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று முடிந்தது. அதேபோல், மிசோரம் மாநிலத்திலும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதனையடுத்து, சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டாம் கட்ட தேர்தல் வரும் நவம்பர் 17 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ், பா.ஜ.க என அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், சத்தீஸ்கர் மாநிலம் பலோடா பஜார் மாவட்டத்தில் காங்கிரஸ் சார்பில் இன்று (15-11-23) தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், “பிரதமர் மோடி என்னை தொடர்ந்து அவதூறாக பேசி வருகிறார். அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. அவர் தொடர்ந்து அப்படி பேசுவதும் ஒரு வகையில் நல்லது தான். ஏனென்றால், அவர் அப்படி பேசும் போது நான் சரியான பாதையிலும், சரியான விஷயங்களையும் செய்து கொண்டிருக்கிறேன் என்று நம்புகிறேன். பிரதமர் மோடி, தொழிலதிபர் அதானிக்கு எவ்வளவு பணம் கொடுக்கிறாரோ, அந்த அளவிற்கான பணத்தை நான் ஏழை மக்களுக்கு கொடுப்பேன். மோடி, அதானிக்கு ஒரு ரூபாய் கொடுத்தால், அந்த ஒரு ரூபாயை நான் ஏழைகளுக்கு கொடுப்பேன்” என்று கூறினார்.