கடந்த வெள்ளியன்று உத்தரப்பிரதேசத்திலிருந்து ஹரியானாவை எட்டிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் ஹரியானாவில் நேற்றுடன் நிறைவுக்கு வந்தது.
நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ராகுல்காந்தி, “நான் டீசர்ட் அணிவதைக் குறித்து பலரும் கேள்வி கேட்கின்றனர். நான் மத்தியப்பிரதேசத்தில் ஒற்றுமை பயணம் மேற்கொண்ட போது அங்கு குளிர் அதிகமாக இருந்தது. அங்கு வேலை பார்க்கும் சிறுவர்கள் உடை கிழிந்த நிலையில் என்னை பார்க்க வரும் பொழுது அவர்கள் படும் கஷ்டத்தை நான் கண்டேன். குளிரில் எனது உடல் நடுங்கும் நிலை வரும் வரையில் டீசர்ட் மட்டுமே அணிவது என்று அப்போது நான் முடிவு செய்தேன். என்னால் தாங்க முடியாத குளிரை நான் எதிர்கொள்ளும் போது ஸ்வெட்டர் அணிவேன்.
நான் மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை பயணம் எனது பிம்பத்தை மாற்றியுள்ளதாகக் கூறுகின்றனர். உங்கள் மனதில் நீங்கள் ராகுல்காந்தியை என்ன மாதிரி வேண்டுமானாலும் அடையாளப்படுத்திக் கொள்ளலாம். அது உங்கள் விருப்பம். ஆனால், எனக்குள் இருந்த ராகுல்காந்தியை நான் எப்போதோ கொன்றுவிட்டேன். நீங்கள் நினைக்கும் ராகுல்காந்தி என் நினைவில் இல்லை. பாஜக நினைக்கும் ராகுல்காந்தியும் என்னிடம் இல்லை. எந்தவிதமான பிம்பத்தைப் பற்றியும் எனக்கு கவலையில்லை. நான் என் பணியைத் தொடர்ந்து செய்துவருகிறேன்” எனக் கூறினார்.