
கரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. அதே சமயம் அண்டை மாநிலமான புதுச்சேரியில் ஊரடங்கு இல்லாததால் அங்கு மதுக்கடைகள், கள், சாராயக் கடைகள் வழக்கம் போல திறந்திருந்தன.
கடலூர் மாவட்டத்தில் மதுக்கடைகள் திறக்கப்படாததால், மது அருந்துவோர் மாவட்ட எல்லைகளில் உள்ள புதுச்சேரி மாநில மதுக்கடைகளுக்குச் சென்று மது அருந்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அதுவும் காணும் பொங்கல் என்பதால் கடந்த ஞாயிற்றுக்கிழமை மது குடிப்பதற்காக புதுச்சேரி எல்லைகளில் உள்ள மது மற்றும் சாராயக் கடைகளுக்குச் சைக்கிளிலும், நடந்தும், இருசக்கர வாகனங்கள் மூலமாகவும் மது அருந்த சென்று வந்து கொண்டிருந்தனர்.
ஆல்பேட்டை மற்றும் சாவடி சோதனைச் சாவடிகளில் போலீசார் மது அருந்திவந்தவர்களை தடுத்து நிறுத்தினர். அவ்வாறு மது குடித்துவிட்டு வந்தவர்களிடம் இருந்து 30 சைக்கிள்களைப் பறிமுதல் செய்தனர். அதேசமயம் போலீசார் பிடியில் சிக்கிக் கொள்ளாமல் தப்பிப்பதற்காக சிலர் பெண்ணை ஆற்றில் நீந்தியும், கரையோரமாக நடந்து சென்றும் கரை ஏறி வீடு திரும்பினர்.
இதேபோல் நெல்லிக்குப்பம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்தவர்களும் வழக்கத்தைவிட அதிகமாக இருசக்கர வாகனத்தில் சென்று புதுச்சேரி மாநில எல்லைகளில் மது அருந்திவிட்டு வந்தனர். ஒருகட்டத்திற்கு மேல் போலீஸார் அவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் விட்டுவிட்டனர்.