1971ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் இந்தியா, பாகிஸ்தானை வெற்றி கண்டது. இதனைத்தொடர்ந்து போரில் தங்கள் இன்னுயிரைத் தந்த இந்திய வீரர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில், டெல்லியில் உள்ள இந்தியா கேட் முன்பு அமர் ஜவான் ஜோதி என்ற அணையா விளக்கை 1972ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி ஏற்றி வைத்தார்.
இந்தநிலையில், இன்று நடைபெறும் நிகழ்வில் 50 ஆண்டுகளாக சுடர்விட்டுக்கொண்டிருந்த அமர் ஜவான் ஜோதி தேசிய போர் நினைவிடத்தில் உள்ள அணையா விளக்கில் இணைக்கப்பட இருப்பதாகவும், இந்தியா கேட் முன்புள்ள அமர் ஜவான் ஜோதி அணைக்கப்படவுள்ளதாகவும் இந்திய இராணுவ அதிகாரி ஏ.என்.ஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்தியா கேட் முன்புள்ள அமர் ஜவான் ஜோதி அணைக்கப்படவுள்ளதற்கு மிகுந்த வேதனை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "நமது வீரர்களுக்காக எரிந்த அணையா சுடர் இன்று அணைக்கப்படுவது மிகுந்த வேதனையை அளிக்கிறது" எனக் கூறியுள்ளார்.
மேலும் ராகுல் காந்தி, "சிலரால் தேசபக்தி மற்றும் தியாகத்தைப் புரிந்து கொள்ள முடியாது. பரவாயில்லை நாங்கள் நமது வீரர்களுக்காக மீண்டும் அமர் ஜவான் ஜோதியை ஏற்றுவோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.