வட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளது. இதனால் பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், டெல்லி, இமாச்சலப்பிரதேசம், காஷ்மீர் உள்ளிட்ட பல வட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது.
டெல்லியில் கடந்த 1982 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒரே நாளில் 153 மி.மீ மழை பதிவானது. அதன் பிறகு கடந்த 9 ஆம் தேதி ஒரே நாளில் 153 மி.மீ மழை பெய்தது. 41 ஆண்டுகளுக்குப் பிறகு பதிவான அதிகபட்ச மழை இதுவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. கனமழை காரணமாக டெல்லியின் முக்கியச் சாலைகள் மழை நீரில் மூழ்கியுள்ளன. பல்வேறு இடங்களில் மழைநீர் ஆறு போல் காட்சியளிக்கிறது. மேலும் டெல்லியில் உள்ள அதன்குட் அணை நிரம்பியதால் யமுனை நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் கரையோரம் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு அதிகாரிகளுடன் மீட்பு பணிகள் குறித்து தொடர்ந்து ஆலோசனை மற்றும் ஆய்வு செய்து வருகிறார்.
இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் யமுனை ஆற்றின் தடுப்பணையில் உள்ள 5 கேட்டுகளை திறப்பது குறித்து ஆய்வு செய்தார். அப்போது இது குறித்து அவர் தெரிவிக்கையில், “யமுனை ஆற்றின் தடுப்பணையில் உள்ள 32 கதவுகளில் 5 கதவுகள் மூடப்பட்டு உள்ளன. அதனால்தான் அருகில் உள்ள பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த 5 கதவுகளையும் திறந்து பாரேஜுக்கு தண்ணீர் செல்லும் வகையில் நாங்கள் முயற்சித்து வருகிறோம். நிலைமையை இயல்புக்குக் கொண்டு வர முயல்கிறோம்” எனத் தெரிவித்தார். சில வாரங்களுக்கு முன்பு தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் தற்போது தீவிரமடைந்து கன மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.