தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் விழா புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இதில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அனைத்து அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பொங்கல் விழாவில் அலங்கரிக்கப்பட்ட பொங்கல் பானையில் வெல்லம் பச்சரிசியிட்டு பெண்கள் பொங்கல் வைத்தனர். தொடர்ந்து தமிழர்களின் பாரம்பரிய உரி அடித்தல், கிராமிய நடனம், கரகாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டிகளில் பொங்கலோ பொங்கல் எனக் கோஷமிட்டபடி ஆளுநர் மாளிகையில் வலம் வந்து பொங்கல் பண்டிகையைக் கோலாகலமாகக் கொண்டாடினார்கள்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், "நாடு பெருமை கொள்ளும் வகையில் ஜி20 நாடுகளின் மாநாடு இந்தியாவில் நடைபெறவுள்ளது. இதன் முதல் கூட்டம் புதுச்சேரியில் நடைபெறுகிறது. அதனால் இது ஜி20 பொங்கல் விழாவாக நடத்தப்பட்டுள்ளது" என்றவரிடம் பால் விலை உயர்வு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "மக்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படுகின்றது. மிகுந்த வலியோடு தான் பால் விலையேற்றப்பட்டுள்ளது. பெண் என்ற முறையில் எனக்கு வருத்தம் தான். ஆனால், சில ஏற்றத்தாழ்வுகளை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்" என்றார்.