உத்தரகாண்ட் மாநில முதலமைச்சராக இருந்த தீரத்சிங் ராவத் பதவியேற்று ஆறு மாதத்தில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வாக முடியாத சூழல் ஏற்பட்டதால், அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, டேராடூனில் நேற்று (03/07/2021) நடந்த பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பா.ஜ.க. சட்டமன்றக் கட்சித் தலைவராகவும், புதிய முதலமைச்சராகவும் புஷ்கர் சிங் தாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
அதைத் தொடர்ந்து, உத்தரகாண்ட் மாநில ஆளுநரைச் சந்தித்த புஷ்கர் சிங் தாமி சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை அளித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். பின்னர், சட்டமன்ற உறுப்பினர்களின் கடிதத்தைப் பரிசீலித்த ஆளுநர், பதவியேற்க வருமாறு புஷ்கர் சிங் தாமிக்கு அழைப்பு விடுத்தார்.
இந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தின் தலைநகர் டேராடூனில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (04/07/2021) நடைபெற்ற பதவியேற்பு விழாவில், முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு உத்தரகாண்ட் மாநில ஆளுநர் பேபி ராணி மௌரியா பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். முதலமைச்சரைத் தொடர்ந்து, புதிய அமைச்சரவையும் பதவியேற்றுக் கொண்டது.
இந்த விழாவில் பா.ஜ.க. கட்சியின் மூத்த தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.