ஜார்க்கண்ட் மற்றும் மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலோடு, பஞ்சாப் மாநிலத்தில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதன்படி, பஞ்சாப்பில் காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கும் நவம்பர் 20ஆம் தேதி நடைபெற்று, அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது நவம்பர் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது.
கிதர்பாஹா சட்டமன்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ அமரீந்தர் சிங் ராஜா, மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் அவர் வெற்றி பெற்றதையடுத்து, கிதர்பாஹா எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து லூதியானா மக்களவை எம்.பியாக பதவியேற்றுக்கொண்டார். இதையடுத்து, கிதர்பாஹா தொகுதி உள்பட 4 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. கிதர்பாஹா தொகுதிக்கு, அமரீந்த்ர சிங் ராஜாவின் மனைவி அம்ரிதா வார்ரிங் காங்கிரஸ் சார்பாக போட்டியிடவுள்ளார்.
மனைவி அம்ரிதா வார்ரிங்கை ஆதரித்து அமரீந்தர் சிங் பிரச்சாரம் செய்யும் போது பேசிய பேச்சு தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது. இது குறித்து அமரீந்தர் சிங் பிரச்சாரத்தில் பேசியதாவது, “எனது மனைவி காலை 6 மணிக்கு உதட்டுச்சாயம் மற்றும் பிண்டி அணிந்து வெளியே சென்று இரவு 11 மணிக்குத் திரும்புகிறார். அவரால் எனக்கு எந்தப் பயனும் இல்லை. அவள் என் கையை விட்டுப் போய்விட்டார். எனக்காக வேறொருவரைக் கண்டுபிடிக்க வேண்டும்.
தேர்தலுக்குப் பிறகு, அவர் திருமணம் மற்றும் இறுதிச் சடங்குகளிலும் பங்கேற்பார். தயவுசெய்து இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதை உறுதி செய்யுங்கள். அதனால் அவர் தனது கணவரால் தேர்தலில் வென்றுவிட்டோம் என்பதை அறிந்து என்னை மதிக்கத் தொடங்குகுவார்” என்று பேசினார். மனைவி உதட்டுச்சாயம் பூசி வெளியே சென்றுவிடுவார் என்று கூறிய இவரது பேச்சு தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது. இதற்கு பா.ஜ.கவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.