உலகத்தையே பீதியடைய செய்துள்ள கரோனா வைரஸின் எதிரொலியால் சனீஸ்வரன் கோவிலில் உள்ள பிரசித்தி பெற்ற நளன் குளத்தில் பக்தர்கள் குளிக்க தடை விதித்துள்ளது காரைக்கால் மாவட்ட நிர்வாகம்.
இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை கரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், பொதுமக்களும், அந்தந்த நாட்டு அரசாங்கமும் பீதியில் உறைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நல்ல வழி துறையின் சார்பில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பக்தர்களின் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருநள்ளாறு நளன் குளத்தில் பக்தர்கள் குளிக்க தடை விதித்தார்.
திருநள்ளார் கோயிலில் சனிக்கிழமைதோறும் பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே காணப்படும். அந்த வகையில் நேற்றும், இன்றும் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. கோயில்களில் கூட்டத்தை சமாளிக்கவும், கரோனா தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், பக்தர்கள் கோயில் உள்ளே நுழையும் வாயிலில், சோப்பு மற்றும் சுடுநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. பக்தர்கள் கோயில் உள்ளே நுழையும் முன்பு கைகளை சோப்புப் போட்டுக் கைகளை நன்றாக கழுவிய பிறகே உள்ளே நுழையும் படி செய்தனர்.
சளி, இருமல் உள்ளவர்கள் கோயிலுக்கு உள்ளே நுழைய வேண்டாம் என்று தடுக்கப்பட்டது. இதேபோல் பிரசித்திபெற்ற நளன் குளத்திலும் தடைகளை மீறி குளிக்க பொதுமக்கள் முண்டியடித்ததால், குளத்தில் இருந்த தண்ணீர் முழுவதையும் மோட்டார் வைத்து வெளியேற்றப்பட்டது. இருந்தும் குளத்தின் படிக்கட்டுகளில் இருந்த தண்ணீரை பக்தர்கள் பலர் பாட்டிலில் பிளாஸ்டிக் கப்புகளில் தண்ணீரை அள்ளி தலையில் ஊற்றிக் கொண்டு சென்றனர்.