
வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கும் நிலையில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த சூழலில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும், 24 மணி நேரத்தில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும். மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் 16 ஆம் தேதி மத்திய மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடலில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (14.11.2023) ஒரு நாள் மட்டும் விடுமுறை என புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். அதே சமயம், தமிழகத்தின் கடலூர், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (14.11.2023) ஒரு நாள் மட்டும் கனமழை எச்சரிக்கை காரணமாக விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.