அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று தமிழகத்தில் 50 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் சார்பில் பேரணி நடத்த நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளை விதித்து அனுமதி அளித்திருந்தது. இதற்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் இணைந்து மத நல்லிணக்க பேரணி நடத்த காவல் துறையிடம் அனுமதி கோரின. இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கேட்ட மதநல்லிணக்க பேரணிக்கும் காவல்துறையால் அனுமதி மறுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மீண்டும் நீதிமன்றத்தை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நாடியது.
இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது அக்.2 ஆம் தேதிக்கு பதிலாக நவம்பர் 6ஆம் தேதி பேரணியை நடத்திக் கொள்ளலாம் அதற்கான அனுமதியை காவல்துறை வழங்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை அக்.31 ஆம் தேதி தள்ளிவைத்தார். அக்.31 ஆம் தேதிக்குள் காவல்துறை அனுமதி வழங்காவிட்டால் அடுத்த நாளே நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான நடவடிக்கை தொடரும் என எச்சரித்தார்.
இந்நிலையில் புதுச்சேரியில் காந்தி ஜெயந்தியான நாளை ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது.
புதுச்சேரி மாநிலத்திலும் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த அனுமதி கேட்டிருந்தது. இதனால் புதுச்சேரியிலும் காரைக்காலிலும் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த புதுச்சேரி காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.
இதன் படி புதுச்சேரியில் காமராஜர் சாலையில் இருந்து மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு முக்கிய சாலைகளின் வழியே செல்லும். காரைக்காலில் புதிய பேருந்து நிலையத்தில் மாலை 4.30 மணிக்கு இந்த ஊர்வலம் புறப்பட்டு முக்கிய சாலைகளின் வழியே கடற்கரை சாலைக்கு சென்றடையும். இந்த இரண்டு இடங்களுக்கும் காவல் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த இடங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.