
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில், 30 வயது நபருக்கு இரட்டை மரண தண்டனையை நீதிமன்றம் விதித்துள்ளது.
குஜராத்தில் உள்ள ஆனந்த் என்ற கிராமத்தில் 7 வயது சிறுமி ஒருவர், 2019 அக்டோபரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், தாதோ கோஹெல் என்ற 24 வயது இளைஞர், சிறுமிக்கு சாக்லேட் கொடுத்து ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன் பின்னர் சிறுமியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து தாதோ கோஹெலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை காம்பாட் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், இன்று கூடுதல் அமர்வு நீதிபதி பர்வீன் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அவர், ‘உண்மையில், இந்தக் குற்றம் மிகவும் கொடூரமானது. சிறுமியைக் கொலை செய்யும் போது குற்றவாளி வெளிப்படுத்திய கொடூரமான மற்றும் தீவிரமான குற்றவியல் தன்மை, நீதித்துறை மனசாட்சியை மட்டுமல்ல, சமூகத்தின் கூட்டு மனசாட்சியையும் கூட அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது’ என்று தாதோ கோஹெலுக்கு இரட்டை மரண தண்டனை விதித்தார்.