
சாவர்க்கர் குறித்து அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு புனே நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி லண்டன் சென்றிருந்தார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு ராகுல் காந்தி பேசுகையில், “சாவர்க்கரும் அவரது நண்பர்களும், முஸ்லிம்களை அடித்து அதன் மூலம் மகிழ்ச்சியாக உணர்ந்தார்கள். ஐந்து பேர் ஒருவரை அடித்து, ஒருவர் மகிழ்ச்சியாக இருந்தால், அது கோழைத்தனம். சாவர்க்கருடன் சேர்ந்து 15 பேர், ஒருவரை அடிக்கிறார்கள். இதுவும் அவர்களின் சிந்தாந்தத்தில் உள்ளது” என்றார். சாவர்க்கர் குறித்து இவர் பேசியது பெரும் சர்ச்சையாக மாறியது.
இது தொடர்பாக ராகுல் காந்தி மீது வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த புனே நீதிமன்றம், ராகுல் காந்தி மே 9ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பியுள்ளது. ஒரு அரசியல் கட்சித் தலைவர் பொறுப்பற்ற முறையில் பேசக்கூடாது என்றும், சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு எதிராக இதுபோன்ற கருத்துக்களை நீதிமன்றம் ஒருபோதும் அனுமதிக்காது என்றும் மீண்டும் இதுபோன்ற கருத்துகளைத் தெரிவித்தால் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் ராகுல் காந்திக்கு கண்டனம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.