புதுச்சேரி பொதுப்பணித்துறையில் பணியாற்றும் 1311 வவுச்சர் ஊழியர்களுக்கு 30 நாட்கள் பணி வழங்க வேண்டும், மத்திய அரசின் சட்டக்கூலியை நாள் ஒன்றுக்கு ரூ. 648 ஆக உயர்த்தி வழங்க வேண்டும், சீனியாரிட்டி அடிப்படையில் பணிநிரந்தரம் செய்ய வேண்டும், 10 மாத நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 25- ஆம் தேதி முதல் அரசு பணியாளர் நல கூட்டமைப்பின் சார்பில் தொடர் வேலைநிறுத்தப் பட்டினிப்போராட்டம் சுதேசி மில் அருகில் நடைபெற்று வருகிறது. ஊழியர்களின் போராட்டத்திற்கு தமிழர் களம், மக்கள் வாழ்வுரிமை இயக்கம், கிராமப்புற மக்கள் பாதுகாப்பு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு பொதுநல அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.
3- ஆவது நாளாக தொடர்ந்துள்ள வவுச்சர் ஊழியர்களின் போராட்டத்தில் புதுச்சேரி தெற்கு மாநில திமுக சார்பில் அமைப்பாளர் இரா. சிவா எம்.எல்.ஏ., தலைமையில் நிர்வாகிகள் நிர்வாகிகள் பங்கேற்று போராட்டத்திற்கு ஆதரவளித்து பேசினார்கள். போராட்டத்தில் இரா. சிவா எம்.எல்.ஏ பேசியதாவது :
ஒரு அரசாங்கம் அரசுத்துறைகளில் வைக்கப்படும் ஆட்களை அடுத்துவருகின்ற அரசுகள் சுயநலத்துடன், அரசியல் ஆதாயத்திற்காக அந்த ஆட்களை வெளியேற்றிவிடுவார்கள். ஆனால் ஆட்களை வேலைக்கு வைத்த அரசாங்கமே அவர்களைப்பற்றி கவலைப்படாமல் உள்ளது இங்குதான். இந்த விசித்திரமெல்லாம் புதுச்சேரியில் தான் அரங்கேறும். இந்த தொழிலாளர்கள் தொடர்ந்து பணியாற்றுகின்ற வகையில் இந்த அரசும், ஆட்சியாளர்களும் முயற்சி மேற்கொள்கிறார்களா என்றால் இல்லை. இன்னும் ஆயிரம் பேரை காவு வாங்கும் வேலையில் தான் அவர்கள் மும்முரம் காட்டி வருகிறார்கள். நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும்போது இந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு நிதி ஒதுக்கி இருக்க வேண்டும். சிறப்புக்கூறு நிதியிலிருந்தாவது ஒதுக்கியிருக்கலாம். ஆனால் அப்படி செய்ய இந்த அரசுக்கு எண்ணமில்லை. இந்த போராட்டம் தொடர்ந்தால் குடிதண்ணீர் விடுவதற்குக்கூட ஆளில்லாமல் புதுச்சேரி நாறிவிடும் சூழல் உள்ளது. இதனை அரசு கவனத்தில் கொள்ளவேண்டும்.
மத்திய அரசு அமல்படுத்தியுள்ள குறைந்தபட்ச கூலி நிர்ணயச்சட்டத்தை அமல்படுத்தாத துறையாக புதுச்சேரி தொழிலாளர் துறை செயல்படுகிறது. புதுச்சேரி அரசுத்துறைகளில் மோசமான துறையாக தொழிலாளர் துறை உள்ளது. துறைதான் இப்படி என்றால் அந்த துறையின் அமைச்சரோ பல அரசு சார்பு நிறுவனங்களுக்கு மூடுவிழா கண்டவராக இருக்கிறார். ஸ்பின்கோ, கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை மூடிய பெருமை அவரையேச்சாரும். இது புதுச்சேரி மக்களின் சாபக்கேடு. ஒரு தனி மனிதனின் கஷ்டத்தை உணருகின்றவர்கள் அரசாங்கத்தில் இருக்க வேண்டும். அப்படி இருந்திருந்தால் தங்களுக்காக உழைத்தவர்ளை இப்படி அல்லல்பட வைப்பார்களா? இந்தியாவில் எந்த மாநிலத்தையும் விட அரசு வேலை என்றால் முகம் சுளிக்கும் மாநிலமாக புதுச்சேரி உள்ளது.
புதுச்சேரியில் 10 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர். 5 ஆயிரம் பேர் சம்பளம் இல்லாமல் வேலை செய்கின்றனர். பல ஊழியர்கள் பணி நிரந்தரம் இல்லாமல் அவநம்பிக்கையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இது அரசாங்கத்திற்கு மிகப்பெரிய கேடு. இதை இப்படியே விட்டுவிடக்கூடாது. ஆட்சிக்குத்தான் திமுக ஆதரவு. ஆட்சியாளர்கள் செய்யும் அக்கிரமத்திற்கு திமுக ஒருபோதும் ஆதரவளிக்காது. திமுக ஏதோ வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்பதற்காக இங்கு பேசவில்லை. இந்த போராட்டம் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக பேசுகிறேன். இந்த தொழிலாளர்களின் குடும்பங்கள் படும் கஷ்டங்களையெல்லாம் அறிந்துதான் இவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுகிறோம். இங்கு போராட்டம் நடத்தினால் சம்பிரதாயத்திற்கு நடத்தப்படும் போராட்டமாக மாறிவிடும். ஆட்சியாளர்களும் கண்டுகொள்ள மாட்டார்கள். நாங்கள் உங்களோடு வருகிறோம். சட்டமன்றத்தை சுற்றியோ அல்லது தலைமைச் செயலகத்தை முடக்குகின்ற வகையில் போராட்டம் நடத்துவோம். ஆட்சியாளர்கள் அடக்குமுறையை கையாண்டாலும் சிறை சென்றாவது நம் கோரிக்கையை வென்றெடுப்போம். அதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் எனும் மாபெரும் இயக்கம் துணை நிற்கும் " இவ்வாறு அவர் பேசினார்.