Skip to main content

"அமைப்புச் சாரா தொழிலாளர் நல வாரியத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்"- தி.மு.க. எம்.எல்.ஏ. வலியுறுத்தல்! 

Published on 18/07/2021 | Edited on 18/07/2021

 

puducherry dmk party mla siva statement

 

புதுச்சேரியில் அமைப்புச் சாரா தொழிலாளர் நல வாரியத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும்,  தி.மு.க.வின் தெற்கு மாநில அமைப்பாளருமான சிவா எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளார். 

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "புதுச்சேரியில் அமல்படுத்தப்பட்டுள்ள கரோனா ஊரடங்கால் அமைப்புச் சாரா தொழிலாளர்கள் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக டாக்ஸி, ஆட்டோ ஓட்டுநர்கள், சிறுக்கடைகள், உணவகங்களில் வேலை செய்வோர், முடிதிருத்துவோர், தையல் கலைஞர்கள், காலனி செய்வோர், சலவை தொழிலாளிகள், சுமை தூக்கும் தொழிலாளிகள்,  குயவர்கள், சமையல்காரர்கள், நடைபாதை வியாபாரிகள், வீட்டு வேலை செய்வோர், மெக்கானிக் உள்ளிட்ட அமைப்புச் சாரா தொழிலாளர்கள்தான் அதிகளவு பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

 

இவர்கள் பாதிக்கப்படும்போது அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்யக் கூடியது நலவாரியம்தான். எனவே அமைப்புச் சாரா தொழிலாளர் நல வாரியத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதே அனைத்து அமைப்புச் சாரா தொழிலாளர்களின் கோரிக்கையாக உள்ளது. இந்த ஆண்டாவது அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு தங்களுக்கான நலத்திட்ட உதவிகள் கிடைக்கும் என்று அமைப்புச் சாரா தொழிலாளர்கள் அனைவரும் எதிர்பார்த்து இருந்தனர். 

 

அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் அமைப்புச் சாரா தொழிலாளர் நல வாரியத்திற்கு தேவையான அதிகாரிகளை நியமித்து, நிதி ஒதுக்கி செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு மாறாக மீண்டும் புதுச்சேரி முறைசாரா தொழிலாளர்கள் நல சங்கத்தின் ஊழியர்கள் மற்றும் நிர்வாக செலவினங்களுக்காக மட்டும் ரூபாய் 1.17 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டும் அமைப்புச் சாரா தொழிலாளர் நல வாரியம் செயல்பாட்டிற்கு வராதோ என்ற அச்சம் அமைப்புச் சாரா தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. மேலும் இதனால் கெரோனா நிவாரணம், தீபாவளி ஊக்கத்தொகை உள்ளிட்ட சலுகைகள் கிடைக்காதோ என்ற சந்தேகமும் அவர்கள் மனதில் ஏற்பட்டுள்ளது. 

 

இந்த சந்தேகத்தைப் போக்கும் வகையில் உடனடியாக அமைப்புச் சாரா தொழிலாளர் நல வாரியத்திற்கு அதிகாரிகளை நியமித்து, நிதியை ஒதுக்கி செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். அந்த நல வாரியம் மூலம் அமைப்புச் சாரா தொழிலாளர்கள் அனைவருக்கும் கரோனா நிவாரணமாக ரூபாய் 5 ஆயிரம் வழங்க வேண்டும். தீபாவளி ஊக்கத்தொகையை இந்த ஆண்டு கிடைக்கச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்". இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்