புதுச்சேரி முதலமைச்சர் நாaராயணசாமி நேற்று (14.05.2020) செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது அவர், "புதுச்சேரியில் தற்போது 3 பேர் மட்டுமே கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகள் தற்போது பச்சை மண்டலமாக உள்ளது. உமிழ்நீர் பரிசோதனையில் புதுச்சேரி இரண்டாவது இடத்தில உள்ளது. ஒரு லட்சம் பேரில் 398 பேருக்கு உமிழ்நீர் எடுத்துச் செயல்படுத்தி வருகின்றோம்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சில திட்டங்களை அறிவித்தார். இதில் சிறு, குறு நிறுவனங்கள் கடன் குறித்து பல அறிவிப்புகளை அறிவித்திருந்தார். 3 லட்சம் கோடியில் வாராக்கடன் இருக்கின்ற தொழிற்சாலைகளுக்கு கடன் வழங்குதல், கட்டுமானப் பணிகளுக்குச் சில சலுகைகள், சில கடன் கொடுக்கின்ற நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளார்கள். இதில் மக்கள் எதிர்பார்க்கின்ற ஏழை, எளிய மக்களுக்கு நிதியை உருவாக்குகின்ற அம்சம் எதுவும் இல்லை.
கூலித் தொழில் செய்பவர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள், விவசாயிகள், 12 கோடி மக்களுக்கு மத்திய அரசு நிதி வழங்க வேண்டும் என்று கேட்டிருந்தோம். மாநிலத்தின் வருவாய் தற்போது குறைந்துள்ளது. மாநிலத்தின் நிதி வருவாய் இழப்பை ஈடுகட்ட மத்திய அரசு நிதி வழங்கவேண்டும் என்று கேட்டிருந்தோம். ஏழை மக்களுக்கு நிதியை எப்படிக் கொடுப்பார்கள் என்று அறிவிப்பு இல்லை. 1 லட்சம் கோடி நிதி சுமையால் தடுமாறும் மாநில அரசுக்கு வழங்க வேண்டும் என்று கேட்டிருந்தோம். ஊரடங்கு உத்தரவைத் தளர்த்துவதற்கு மக்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளது. ஊரடங்கு குறித்து மத்திய அரசு அறிவித்த பின்பு புதுச்சேரியில் அறிவிப்போம். மாநில அரசுக்கு அதிகாரம் வழங்க வலியுறுத்தி உள்ளேன்.
புதுச்சேரி மக்கள் சகஜ வாழ்க்கைக்குத் திரும்பி உள்ளனர். மக்கள் பொறுப்புடன் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும்" என்று கூறினார்.