Skip to main content

"நான் ஏன் இப்படி செய்தேன் என தெரியவில்லை"... வறுமையால் விவசாயி எடுத்த விபரீத முடிவு...

Published on 02/05/2020 | Edited on 02/05/2020

 

telangana farmer issue

 

வறுமை காரணமாக தனது நான்கு வயது மகளை தந்தையே கொன்ற சம்பவம் தெலங்கானாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


தெலங்கானா மாநிலம், சங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள கோங்குலுரு பழங்குடி கிராமத்தை சேர்ந்த விவசாயி ஜீவா (30). ஊரடங்கு காரணமாக வருமானம் இல்லாத அவர், தனது குடும்பத்துடன் உணவுக்கே கஷ்டப்படும் சூழலில் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று தன்னுடைய குடிசைக்கு வெளியே திடீரென அலறியடித்து ஓடிவந்த ஜீவா, தன் மகளை காணவில்லை என அக்கம்பக்கத்தினரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் போலீஸாருக்கு தகவல் அளித்ததையடுத்து, அங்கு வந்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் வீட்டிலிருந்து சிறிது தூரம் தள்ளி சிறுமி கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடப்பதை போலீஸார் கண்டறிந்துள்ளனர். இதனையடுத்து சிறுமியின் உடலை கைப்பற்றிய போலீஸார் அதனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அப்பகுதியில் இதுகுறித்து விசாரித்துக்கொண்டிருந்தபோது, அங்கிருந்த ஜீவா திடீரென உணர்ச்சிவசப்பட்டுக் கதறி அழத்தொடங்கியுள்ளார். மகளின் பசிக்கு உணவளிக்கக் கையில் காசு இல்லாததால் வேறு வழி தெரியாமல், தனது மகளை தானே கொன்றதாக போலீஸாரிடம் அவர் தெரிவித்துள்ளார்.

"நானே என் குழந்தையைக் கொலை செய்தேன் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. எனக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். அவர்களின் பசிக்கு எப்படி உணவளிப்பது என எனக்கு வழி தெரியவில்லை. மூன்றில் ஒரு குழந்தையை கொன்றுவிட்டால் மீதம் இருப்பவர்களுக்கு என்னால் உணவு கொடுத்து அவர்களை பார்த்துக்கொள்ள முடியுமென நினைத்து இவ்வாறு செய்துவிட்டேன்" எனக் கதறி அழுதுள்ளார். இதனையடுத்து குற்றத்தை ஒப்புக்கொண்ட ஜீவாவை போலீஸார் கைதுசெய்து அழைத்துச் சென்றனர். உணவளிக்க பணம் இல்லாமல் தந்தையே, தான் பெற்ற மகளை கொன்ற சம்பவம் தெலங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்