Skip to main content

பட்ஜெட் கூட்டத்தொடர்; ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய தி.மு.க வலியுறுத்தல்  

Published on 15/03/2023 | Edited on 15/03/2023

 

puducherry budget session dmk mla naajim request 

 

புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 9 ஆம் தேதி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து 10-ஆம் தேதி துணைநிலை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் பேசினர். அதனைத் தொடர்ந்து 13-ஆம் தேதி முதலமைச்சர் ரங்கசாமி 2023-24 ஆம் நிதி ஆண்டுக்கான 11,600 கோடி ரூபாய் மதிப்பிலான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

 

பட்ஜெட் கூட்டத்தொடரின் 5-வது நாளான இன்று சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதில் அளித்தனர். அப்போது ப்ரீ-பெய்டு மின் மீட்டர் திட்டத்தை அமல்படுத்தினால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், எனவே ப்ரீ பெய்டு மின் திட்டத்தை அமல்படுத்தக்கூடாது எனவும் சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையில் கோரிக்கை வைத்தனர். அப்போது பதிலளித்து பேசிய மின்துறை அமைச்சர் நமச்சிவாயம், "தவறான புரிதல்  காரணத்தால் ப்ரீ-பெய்டு மின் மீட்டர் திட்டத்தை சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கின்றனர். மின் திருட்டு, மின் பாக்கி போன்றவற்றை தடுப்பதற்காகவே ப்ரீ-பெய்டு மின் மீட்டர் திட்டம் கொண்டு வரப்படவுள்ளது" என விளக்கம் அளித்த அவர், "நடைமுறை சிக்கல்கள் இல்லாமலும், பொதுமக்கள் பாதிக்காத வகையிலும் ப்ரீ-பெய்டு மின் திட்டம் கொண்டு வரப்படும்" எனத் தெரிவித்தார். தொடர்ந்து மக்களை பாதிக்கக்கூடிய ப்ரீ-பெய்டு மின் திட்டத்தை கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ப்ரீ-பெய்டு மின் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தும் சட்டப்பேரவையிலிருந்து எதிர்க்கட்சித் தலைவர் சிவா எம்.எல்.ஏ தலைமையில் தி.மு.க மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

 

இதனிடையே புதுச்சேரி மாநிலத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், "புதுச்சேரியில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய சட்டம் இயற்ற வேண்டும்" என சட்டப்பேரவையில் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் நாஜிம் வலியுறுத்தினார். 

 

 

சார்ந்த செய்திகள்