உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 55 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 4000- க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 1,00,000- க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன.
இந்த ஊரடங்கின் காரணமாக இந்தியா முழுவதும் கல்விக்கூடங்கள் திறப்பு, பேருந்து போக்குவரத்து முதலியன முடங்கி போய் உள்ளது. சில மாநிலங்களில் பேருந்து போக்குவரத்து தற்போது தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக 20 பேர் பயணிக்கும் வகையில் குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகள் கர்நாடக மாநிலத்தில் இயக்கப்பட்டன. தற்போது பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி நாளை 3500 பேருந்துகளை கூடுதலாக இயக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதில் 30 நபர்கள் பயணிக்கலாம் என்று கூறப்படுகின்றது. அம்மாநிலத்தில் கரோனா பரவல் தமிழகத்தோடு ஒப்பிடுகையில் கட்டுக்குள் இருக்கின்றது. ஏறக்குறைய 1500 நபர்கள் மொத்தமாக அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.