Skip to main content

கரோனா மூன்றாவது அலை எந்த மாதத்திலிருந்து தொடங்கும் - நிதி ஆயோக் கணிப்பு!

Published on 05/06/2021 | Edited on 05/06/2021

 

corona

 

இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது கரோனா பாதிப்பு குறைந்துவருகிறது. இந்நிலையில், நிதி ஆயோக்கின் உறுப்பினர் வி.கே. சரஸ்வத், கரோனா இரண்டாவது அலை குறித்தும், மூன்றாவது அலை எப்போது என்பது குறித்தும் பேசியுள்ளார்.

 

நிதி ஆயோக்கின் உறுப்பினர் சரஸ்வத், கரோனா இரண்டாவது அலையை நாம் நன்றாக கையாண்டிருப்பதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர், "கரோனா தொற்றின் இரண்டாவது அலையை நாம் நன்றாக கையாண்டுள்ளோம். இதன் விளைவாக இரண்டாவது அலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிட்டன. ஆக்சிஜன் வங்கிகளை உருவாக்கியது, பெரிய தொழிற்சாலைகளை ஆக்சிஜனை தர வைத்தது. திரவ ஆக்சிஜனைக் கொண்டுசெல்ல ரயில்வே, விமான நிலையங்களைப் பயன்படுத்தியது, இராணுவத்தைப் பயன்படுத்தியது என நமது அறிவியல் மற்றும் தொழிற்நுட்ப உதவியுடன் நம்மால் கரோனா இரண்டாவது அலையைக் கையாள முடிந்தது" என தெரிவித்துள்ளார்.

 

கரோனா இரண்டாவது அலை ஏற்படும் என்பதற்கான அறிகுறிகளும் இருந்தன. ஆனால் தொற்றுநோய் வல்லுநர்களின் ஆய்வுகள், இரண்டாவது அலை இவ்வளவு வலுவானதாக இருக்கும் என தெரிவிக்கவில்லை என அவர் கூறியுள்ளார். தொடர்ந்து சரஸ்வத், மரபணு மாற்றமடைந்த கரோனா வேகமாக பரவியபோது அதிகரித்த ஆக்சிஜன் தேவையைப் பூர்த்தி செய்யும் நிலையில் நாம் இல்லை என கண்டறிந்ததாக தெரிவித்துள்ளார்.

 

இதுதொடர்பாக அவர், "இரண்டாவது அலையில், வைரஸ் வேறுபட்ட குணாதிசயத்தைக்கொண்டிருந்தது. இதன் விளைவாக நுரையீரல் மீது பெரிய அளவில் மறைமுகமாக தாக்குதல் நடந்தது. இதனால் தொற்றின் ஆரம்ப கட்டத்திலேயே ஏராளமான மக்களுக்கு ஆக்சிஜன் தேவைப்பட்டது.  எதிர்பாராமல் மரபனு மாற்றமடைந்த கரோனா பரவியது. இதன் விளைவாக, அதிகரித்த ஆக்சிஜன் தேவையையும், அந்தக் குறிப்பிட்ட கட்டத்தில் தேவைப்படும் மருந்துகளின் தேவையையும் பூர்த்தி செய்யும் நிலையில் நாம் இல்லை என்பதைக் கண்டறிந்தோம்" என கூறியுள்ளார்.

 

மேலும் கரோனா மூன்றாவது அலை குறித்து பேசியுள்ள சரஸ்வத், இந்திய தொற்றுநோய் நிபுணர்கள் கரோனா மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது என்றும், அது இளைய சமுதாயத்தை அதிகம் பாதிக்கும் என்றும் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். செப்டம்பர் - அக்டோபர் மாதத்தில் மூன்றாவது அலை தொடங்க வாய்ப்பிருக்கிறது என்பதால், ஜூலை - ஆகஸ்ட் மாதத்திற்குள் அதற்குத் தயாராவதை எதிர்நோக்கியுள்ளோம் எனவும் அவர் கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்